மோட்டார் சைக்கிள்கள் மோதல்; 3 பேர் படுகாயம்
ஆற்காடு அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதலில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
திமிரியை அடுத்த நம்பரை கிராமத்தை சேர்ந்தவர் ஆதிகேசவன் (வயது 45). கட்டிட மேஸ்திரி. இவர் நேற்று இரவு திமிரியில் இருந்து ஆற்காடு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அதேபோல் கலவையை அடுத்த மேச்சேரி பகுதியைச் சேர்ந்த பூவேந்தன் (26), விக்னேஷ் (26) ஆகிய இருவரும் ஆற்காட்டில் இருந்து திமிரி நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர். ஆற்காடு அடுத்த விளாபாக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகே வரும்போது இரண்டு மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி பெற்று மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்த புகாரின் பேரில் திமிரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.