மோட்டார் சைக்கிள்கள் மோதல்; விவசாயி பலி
கிணத்துக்கடவு அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் விவசாயி பலியானார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் விவசாயி பலியானார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.
விவசாயி
கிணத்துக்கடவு அருகே உள்ள குள்ளிசெட்டிபாளையத்தை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியம்(வயது 77). விவசாயி. இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் கோவில்பாளையத்தில் வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்கள் வாங்கிக்கொண்டு மீண்டும் கோவை-பொள்ளாச்சி நான்கு வழிச்சாலையில் குள்ளிசெட்டிபாளையம் நோக்கி சென்றார். சேரன் நகரை தாண்டி சென்றபோது பொள்ளாச்சியில் இருந்து கிணத்துக்கடவை நோக்கி வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் திடீரென சிவசுப்பிரமணியம் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேராக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சிவசுப்பிரமணியம், மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த நெம்பர் 10 முத்தூரை சேர்ந்த நாகராஜ் ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.
விசாரணை
இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் சிவசுப்பிரமணியம், நாகராஜ் ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் சிவசுப்பிரமணியத்திற்கு டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். நாகராஜ், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.