மோட்டார் சைக்கிள்கள் மோதல்; ஒருவர் பலி


மோட்டார் சைக்கிள்கள் மோதல்; ஒருவர் பலி
x

விராலிமலையில் 2 மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் பலியானார். படுகாயம் அடைந்த 2 பேருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

புதுக்கோட்டை

மோட்டார் சைக்கிள்கள் மோதல்

விராலிமலை தாலுகா காலசங்கம்பட்டியை சேர்ந்தவர் நல்லுச்சாமி (வயது 37). இவர் நேற்று தனது மோட்டார் சைக்கிளில் விராலிமலையில் இருந்து கீரனூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே கொடிக்கால்பட்டியை சேர்ந்த மலைச்சாமி (37), ராமமூர்த்தி (38) ஆகியோர் சென்ற மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக நல்லுச்சாமி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற 3 பேரும் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து, விராலிமலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் விராலிமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தீவிர சிகிச்சை

அங்கு நல்லுச்சாமியை டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது அவர் ஏற்கனவே இறந்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, படுகாயம் அடைந்த மலைச்சாமி, ராமமூர்த்திக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story