மோட்டார் சைக்கிள்கள் மோதல்; போலீஸ் ஏட்டு படுகாயம்
கிணத்துக்கடவு அருகே 4 வழிச்சாலையில் மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் போலீஸ் ஏட்டு படுகாயம் அடைந்தார்.
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு அருகே உள்ள தாமரைக்குளம் ஆர்.எஸ்.ரோடு பகுதியைச் சேர்ந்தவர் காமாட்சிசுந்தரம் (வயது 40). இவர் வடக்கிபாளையம் போலீஸ் நிலையத்தில் போலீஸ் ஏட்டாக பணியாற்றி வருகிறார். இவர் சம்பவத்தன்று தாமரைக்குளம் பகுதியில் 4 வழிச்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே கரூர் மாவட்டம் குரும்பபபட்டியில் இருந்து பொள்ளாச்சி நோக்கி வந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரின் மோட்டார் சைக்கிள் காமாட்சிசுந்தரம் மீது மோதியது.
இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து கிணத்துக்கடவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருப்பசாமி பாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.