வாகன சோதனையில் ஈடுபட்டபோது தாறுமாறாக ஓடிய கார் மோதல்; சப்-இன்ஸ்பெக்டர் உட்பட 7 பேர் காயம் - டிரைவர் கைது


வாகன சோதனையில் ஈடுபட்டபோது தாறுமாறாக ஓடிய கார் மோதல்; சப்-இன்ஸ்பெக்டர் உட்பட 7 பேர் காயம் - டிரைவர் கைது
x

வண்ணாரப்பேட்டையில் போலீசார் வாகன சோதனையில் தாறுமாறாக ஓடிய கார் மோதிய விபத்தில் சப்-இன்ஸ்பெக்டர் உட்பட 7 பேர் படுகாயமடைந்தனர்.

சென்னை

வண்ணாரப்பேட்டை கண்ணன் ரவுண்டானா பார்த்தசாரதி மேம்பாலம் அருகே நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வேகமாக வந்த காரை போலீசார் சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்ய முயன்றனர். அப்போது, அங்கு கட்டுப்பாட்டை இழந்து நிலைத்தடுமாறி தாறுமாறாக ஓடிய அந்த கார், வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீது பயங்கரமாக மோதியது. இதில், வண்ணாரப்பேட்டை போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வரும் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியை சேர்ந்த அன்புதாசன் (வயது 28) என்பவர் படுகாயமடைந்தார்.

மேலும், அவர் மீது மோதி விபத்தை ஏற்படுத்திவிட்டு தொடர்ந்து நிற்காமல் சென்ற கார், அங்கு சாலையில் நிறுத்த வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் மற்றும் நடந்து சென்றதிருவொற்றியூரை சேர்ந்த சுமையா (19), வண்ணாரப்பேட்டையை சேர்ந்த நான்சி (12), சாய்னா (38), புழலை சேர்ந்த அபிதா (65) வண்ணாரப்பேட்டை சேர்ந்த ஜூலி (38), சதாம் உசேன் (30) ஆகிய 7 பேர் மீதும் தாறுமாறாக மோதி நின்றது. இந்த கார் விபத்தில் சப்-இன்ஸ்பெக்டர் அன்புதாசனுக்கு தலை, கை, கால் உள்ளிட்ட இடங்களில் படுகாயம் ஏற்பட்டது. இதுபோல் பொதுமக்கள் 6 பேருக்கும் கை, கால், உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டு வலியால் துடித்தனர். இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் அன்புதாசன் உள்ளிட்ட 7 பேரையும் வண்ணாரப்பேட்டை போக்குவரத்து போலீசார் மீட்டு, சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தை கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார் விபத்துக்கு காரணமான வண்ணாரப்பேட்டை வீரபதி செட்டி தெருவை சேர்ந்த கார் டிரைவரான உமாபதி (வயது 41) என்பவர் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், காரை நிறுத்த முயன்ற போது 'பிரேக்' திடீரென செயலிழந்ததால் கட்டுப்பாட்டை இழந்து கார் தாறுமாறாக ஓடி விபத்தை ஏற்படுத்தியதாக அவர் தெரிவித்ததாக போலீசார் தெரிவித்தனர். இது குறித்து வண்ணாரப்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story