தஞ்சையில், வண்ண கோலப்பொடி விற்பனை மும்முரம்


தஞ்சையில், வண்ண கோலப்பொடி விற்பனை மும்முரம்
x

மார்கழி மாதம் பிறந்ததை தொடர்ந்து தஞ்சையில் வண்ண கோலப்பொடி விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது.

தஞ்சாவூர்

மார்கழி மாதம் பிறந்ததை தொடர்ந்து தஞ்சையில் வண்ண கோலப்பொடி விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது.

ஐஸ்வர்யத்தின் அடையாளம் கோலம்

தமிழர்களின் பாரம்பரிய பழக்கங்களில் ஒன்றாக கோலமிடுதல் உள்ளது. தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் வீட்டுவாசலில் கோலமிட்டாலும், மார்கழி மாதத்தில் அதிகாலை பொழுதில் பல்வேறு வண்ணங்களில் கோலமிடுவது ஐதீகமாக இருந்து வருகிறது.

மார்கழி மாதம் வந்தாலே வீடுகளில் தெய்வீக மணம் கமழும். இந்த மாதத்தில் பெரும்பாலான பெண்கள் அதிகாலையிலேயே எழுந்து தங்கள் வீடுகளின் முன்பு ஐஸ்வர்யத்தின் அடையாளமான வண்ணக்கோலங்களை இட்டு மகிழ்கிறார்கள்.

தினமும் ஒரு கோலம்

அதன்படி நேற்று மார்கழி மாதம் பிறந்ததை தொடர்ந்து பெண்கள் அதிகாலையில் எழுந்து தங்களது வீட்டுவாசலில் கோலமிட்டனர். கம்பிக்கோலம், பாம்புக்கோலம், தாமரைக்கோலம், புள்ளி கோலம், நேர்ப்புள்ளி கோலங்கள், தொட்டில் கோலம், புள்ளிகளிடையே வரையும் கோலம், ஊடுபுள்ளி கோலம் என தினமும் ஒவ்வொரு வகையான கோலங்களை மார்கழி மாதத்தில் பெண்கள் வீட்டு வாசலில் போட்டு மகிழ்கின்றனர்.

மற்ற மாதங்களை விட மார்கழி மாதம் அதிகாலை நேரத்தில் வழக்கத்தை விட காற்றில் அதிக அளவு ஆக்சிஜன் நிறைந்து இருக்கும் என்பதால் அதிகாலையில் கோலம்போடும் பெண்களின் உடல் புத்துணர்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். எனவே பெண்கள் மார்கழி மாதம் முழுவதும் வெவ்வேறு வண்ணங்களில் கோலமிடுவதற்காக வண்ண கோலப்பொடிகளை வாங்க ஆர்வம் காட்டுகிறார்கள்.

விற்பனை மும்முரம்

இதனால் தஞ்சை மாநகரில் வண்ண கோலப்பொடி விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. தஞ்சை கீழவாசல், அண்ணாசாலை, பழைய மாரியம்மன்கோவில் சாலை என பல்வேறு இடங்களில் வாகனங்களில் வைத்தும், சிலர் சாலையோரங்களில் தற்காலிக கடைகள் அமைத்தும் கோலப்பொடிகளை விற்பனை செய்து வருகின்றனர்.

மஞ்சள், சிவப்பு, ஆரஞ்சு, பச்சை, ஊதா, கருப்பு, நீலம், காவி, வெள்ளை என 18 வகையான வண்ணங்களில் கோலப்பொடி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 100 கிராம் வண்ண கோலப்பொடி பாக்கெட்டுகள் தரம்வாரியாக ரூ.5, ரூ.10 என விற்பனை செய்யப்படுகிறது. ¼ கிலோ வண்ண கோலப்பொடி ரூ.20-க்கும், 1 கிலோ வண்ண கோலப்பொடி ரூ.80-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. .

மக்கள் ஆர்வம்

இது குறித்து வியாபாரிகள் கூறும்போது, நவீன உலகில் நாகரீகம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும் சுப நிகழ்ச்சிகள், கோவில் திருவிழா, தீபாவளி, புத்தாண்டு, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் வண்ண, வண்ண கோலமிடுவது மக்களிடையே இன்னமும் மாறாமல் இருக்கிறது.

குறிப்பாக மார்கழி மாதத்தில் வண்ண கோலமிடும் வழக்கம் மக்களிடையே அதிகளவில் இருக்கும். அதன்படி இந்த ஆண்டு வழக்கத்தை விட மார்கழிமாத தொடக்கத்திலேயே வண்ண கோலப்பொடிகள் விற்பனை தீவிரமாக நடந்து வருகிறது. பொதுமக்களும் அதிக ஆர்வம் காட்டி வாங்கி செல்கின்றனர் என்றனர்.


Next Story