பெண்களுக்காக நிறம் மாறிய பஸ்கள்
குமரி மாவட்டத்தில் பெண்களுக்காக நிறம் மாறிய பஸ்கள்
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் பஸ்கள் 'பிங்க்' நிறமாக மாற்றப்பட்டு வருகிறது.
இலவச பஸ் பயணம்
தமிழகத்தில் தி.மு.க. அரசு பொறுப்பேற்றதும் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி மகளிருக்கு இலவச பஸ் சேவையை தொடங்கியது. இந்த திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டமானது தினசரி வேலைக்கு செல்லும் பெண்களுக்கும், ஏழை பெண்களுக்கும் மிகவும் உதவிகரமாக இருந்து வருகிறது. வேலைக்கு செல்லும் பெண்களுக்கு இந்த திட்டத்தால் மாதத்துக்கு ரூ.2 ஆயிரம் வரை போக்குவரத்து செலவு குறைந்து உள்ளது.
குமரி மாவட்டத்தை பொறுத்த வரையில் 300 அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்து வருகிறார்கள். அந்த பஸ்களை பெண்கள் அடையாளம் காணும் வகையில் பஸ்சின் முன்புற கண்ணாடியில் "மகளிர் பயணம் செய்ய கட்டணமில்லை" என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு உள்ளது. ஆனால் பெரும்பாலான பஸ்களில் அந்த ஸ்டிக்கர் கிழிந்து விட்டது. இதனால் இலவச பஸ்களை அடையாளம் காண பெண்கள் சிரமம் அடைந்து வந்தனர். மேலும் இலவசம் அல்லாத பஸ்களில் ஏறி டிக்கெட் எடுக்க வேண்டிய காட்டயத்துக்கும் தள்ளப்பட்டனர்.
பெண்கள் மத்தியில் வரவேற்பு
எனவே இதற்கு மாற்று ஏற்பாடு செய்ய அரசு முடிவு செய்தது. அதன்படி சென்னையில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் பஸ்களுக்கு 'பிங்க்' நிறத்தில் வண்ணம் தீட்டப்பட்டது. இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இலவச பஸ்களை பெண்கள் சுலபமாக அடையாளம் கண்டு அதில் ஏறி பயணம் செய்தனர்.
இந்த நிலையில் பெண்கள் பயணம் செய்யும் இலவச பஸ்களுக்கு 'பிங்க்' நிற வண்ணம் தீட்டும் திட்டம் குமரி மாவட்டத்தில் தற்போது அமல்படுத்தப்பட்டு உள்ளது. அந்த வகையில் பெண்கள் இலவச பயணம் செய்யும் 300 பஸ்களுக்கும் 'பிங்க்' நிற வண்ணம் தீட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது வரை 100-க்கும் மேற்பட்ட பஸ்களுக்கு வண்ணம் தீட்டப்பட்டு உள்ளது. பஸ்சின் முன்புறத்தில் மட்டும் இந்த 'பிங்க்' நிற வண்ணம் தீட்டப்பட்டு இருக்கும். இதன் மூலம் பெண்கள் தாங்கள் பயணம் செய்ய கூடிய இலவச பஸ்களை எளிதில் அடையாளம் கண்டு வருகின்றனர். இந்த திட்டம் பெண்கள் மத்தியில் வரவேற்பையும் பெற்றுள்ளது.