கள்ளக்குறிச்சியில் ஒருங்கிணைந்த புகைப்பட கண்காட்சி - கலெக்டர் ஷ்ரவன்குமார் தொடங்கி வைத்தார்
கள்ளக்குறிச்சியில் ஒருங்கிணைந்த புகைப்பட கண்காட்சியை கலெக்டர் ஷ்ரவன்குமார் தொடங்கி வைத்தார்.
புகைப்பட கண்காட்சி
மத்திய அரசின் தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய மக்கள் தொடர்பு சென்னை மண்டல அலுவலகம் சார்பில் மக்கள் நலத்திட்டங்கள், சர்வதேச யோகா தினம், சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு, சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை ஆகிய மைய கருத்துக்களைகொண்டு ஒருங்கிணைந்த புகைப்பட கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நேற்று தொடங்கி வருகிற 16-ந் தேதி வரை 4 நாட்கள் நடைபெறுகிறது. கள்ளக்குறிச்சி தனியார் திருமண மண்டபத்தில் நடந்த தொடக்க விழாவிற்கு சென்னை மண்டல கூடுதல் தலைமை இயக்குனர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். புதுச்சேரி மத்திய மக்கள் தொடர்பக துணை இயக்குனர் சிவக்குமார் வரவேற்றார்.
நமது கடமை
சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி புகைப்பட கண்காட்சி மற்றும் கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
மாநில அரசும், மத்திய அரசும் மக்களின் மேம்பாட்டுக்காக பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இத்திட்டங்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு இருந்தால் தான் நாட்டின் வளர்ச்சி மேன்மையானதாக அமையும். நாளைய தலைமுறையினர் வாழத்தக்க பூமியை ஒப்படைக்க வேண்டியது நமது கடமையாகும். தமிழ்நாடு அரசு ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்துள்ளது. பொதுமக்கள் இத்தகைய பொருட்களை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பரிசு
அதைத்தொடர்ந்து கலெக்டர் யோகா குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வெளியிட்டதுடன், ஆரோக்கிய குழந்தைகள் போட்டியில் வெற்றி பெற்ற குழந்தைகள் மற்றும் பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளையும் வழங்கினார்.
கண்காட்சியில் ஆதார் அட்டை திருத்த அரங்கு, சிறுதானிய ஊட்டச்சத்து அரங்கு, மருத்துவ மூலிகைகள் அரங்கு, சமூக நலத்துறை அரங்கு, காசநோய் அரங்கு, மகளிர் திட்ட சுய உதவிக் குழுக்களின் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.
நிகழ்ச்சியில் ராஷ்டிரிய ரக்ஷா பல்கலைக்கழகத்தின் புதுச்சேரி வளாக இயக்குனர் நந்தகுமார புஜம், கள்ளக்குறிச்சி சுகாதார பணிகள் துணை இயக்குனர் ராஜா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட மாவட்ட அலுவலர் செல்வி, மாவட்ட சமூக நல அலுவலர் தீபிகா, தாட்கோ மேலாளர் ஆனந்த மோகன், இம்ப்காப்ஸ் இயக்குனர் பாஸ்கரன், அரியலூர் குருஜி ருத்ர சாந்தி யோகாலயா அமைப்பாளர் கிருஷ்ணகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் புதுச்சேரி கள விளம்பர உதவி அலுவலர் வீரமணி நன்றி கூறினார்.