பட்டாசு வெடிவிபத்தில் காயமடைந்தவர்களுக்கு அமைச்சர் அர.சக்கரபாணி நேரில் ஆறுதல்
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரியில் பட்டாசு வெடி விபத்தில் காயம் அடைந்தவர்களை அமைச்சர் அர.சக்கரபாணி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
நேரில் ஆறுதல்
கிருஷ்ணகிரி பட்டாசு வெடிவிபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை தமிழக உணவுத்துறை அமைச்சரும், மாவட்ட பொறுப்பு அமைச்சருமான அர.சக்கரபாணி நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் அமைச்சர் அர.சக்கரபாணி நிருபர்களிடம் கூறியதாவது:-
கிருஷ்ணகிரியில் பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 9 பேர் இறந்துள்ளனர். 10 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது குறித்து தகவல் அறிந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து, என்னை இங்கு அனுப்பி வைத்து மீட்பு பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
காரணம் தெரியவில்லை
அதன் அடிப்படையில் நானும், கலெக்டரும், போலீஸ் சூப்பிரண்டும், இங்குள்ள மக்கள் பிரதிநிதிகளும் வந்துள்ளோம். காயமடைந்தவர்களுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்க டாக்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன். பலியானவர்களின் குடும்பங்களுக்கு ரூ.3 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும், சிறு காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. தர்மபுரியில் இருந்து தடயவியல் நிபுணர்கள் வந்து ஆய்வு செய்கிறார்கள். இன்று(நேற்று) இரவுக்குள் விபத்துக்கான முழு விவரமும் தெரியவரும். பின் தெளிவான விரிவான அறிக்கையாக வெளியிடப்படும். இந்த மாவட்டத்தில் இது போல ஏற்கனவே விபத்துக்கள் நடந்துள்ளதாக கூறினார்கள்.
நடவடிக்கை எடுக்கப்படும்
இனிமேல் இதே போல விபத்துகள் நடக்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மக்கள் வசிக்க கூடிய பகுதிகளில் பட்டாசு கடைகள், குடோன்கள் வைப்பதில் உரிய பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். இது தொடர்பாக மாவடட நிர்வாகமும், காவல் துறையும் உரிய நடவடிக்கை எடுக்கும்
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது மாவட்ட கலெக்டர் சரயு, போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர், கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் டி.மதியழகன் எம்.எல்.ஏ., மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ., மாவட்ட அவைத்தலைவர் தட்ரஅள்ளி நாகராஜ், நகராட்சி தலைவர் பரிதா நவாப், நகர செயலாளர் நவாப், முன்னாள் எம்.எல்.ஏ. முருகன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.