வருகிற 30-ந் தேதி நடக்கிறது: சத்திரப்பட்டி ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர்களுக்கு கார் பரிசு -அமைச்சர் மூர்த்தி தகவல்


வருகிற 30-ந் தேதி நடக்கிறது: சத்திரப்பட்டி ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர்களுக்கு கார் பரிசு -அமைச்சர் மூர்த்தி தகவல்
x

சத்திரப்பட்டி ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர்களுக்கு கார் பரிசு வழங்கப்படும் என்று அமைச்சர் மூர்த்தி கூறினார்.

மதுரை


சத்திரப்பட்டி ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர்களுக்கு கார் பரிசு வழங்கப்படும் என்று அமைச்சர் மூர்த்தி கூறினார்.

ஜல்லிக்கட்டு

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதி சார்பாக எம்.சத்திரப்பட்டி கிராமத்தில் வருகிற 30-ந் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இதன் முன்னேற்பாடு பணிகள் குறித்து அமைச்சர் மூர்த்தி நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதி சார்பாக எம்.சத்திரப்பட்டி கிராமத்தில் வருகின்ற 30-ந் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட உள்ளது. தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கெல்லாம் முன்மாதிரியாக திகழும் வகையில் மிகப்பிரமாண்டமாக இந்த போட்டியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. எம்.சத்திரப்பட்டி மிகுந்த பாரம்பரியம் நிறைந்த கிராமம்.

அண்ணா வருகை தந்த கிராமம்

கடந்த 1966-ம் ஆண்டு அண்ணா, இந்த கிராமத்திற்கு நேரடியாக வருகை தந்து அறிவு பூங்கா மையத்தை திறந்து வைத்த வரலாறு உண்டு. எனவே இந்த கிராமத்தில் இந்த ஜல்லிக்கட்டு போட்டியை ஒரு திருவிழாவாக நடத்துவதில் மகிழ்ச்சி. போட்டியில் 1,000-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் சிறந்த மாடுபிடி வீரர்கள் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்றிட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு மைதானத்தில் வாடிவாசல், விழா மேடை, பார்வையாளர்கள் பாதுகாப்பாக அமர்ந்து போட்டியை கண்டுகளித்திட அரங்கு என அனைத்து முன்னேற்பாடு நடவடிக்கைகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான பரிசோதனை என அரசு வழங்கியுள்ள அனைத்து வழிகாட்டு நடைமுறைகளும் முறையே கடைபிடிக்கப்படும்.

ரூ.5.28 கோடி சாலைகள்

போட்டியில் வெற்றிபெறும் சிறந்த காளை, சிறந்த மாடுபிடி வீரர் என இரு பிரிவாக கார் முதல் பரிசு, புல்லட் பைக் இரண்டாம் பரிசு, ஹீரோ பைக் மூன்றாம் பரிசு என முறையே வழங்கப்படும். அதேபோல, சிறப்பாக விளையாடும் காளை மற்றும் மாடுபிடி வீரருக்கு 1 கிராம் தங்க நாணயம், வண்ண தொலைக்காட்சி, சைக்கிள் போன்ற எண்ணற்ற சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

அதன் தொடர்ச்சியாக நெடுஞ்சாலை துறை சார்பாக மதுரை கிழக்கு தொகுதியில் ரூ.5.28 கோடி செலவில் மேற்கொள்ளப்பட உள்ள 3 தார்சாலை மேம்பாட்டு பணிகளை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசும்போது, மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் நலனை கருத்திற்கொண்டு பல்வேறு உட்கட்டமைப்பு வசதி, மேம்பாட்டு பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், நாயக்கன்பட்டி கிராமத்தில் ரூ.1.37 கோடியில் 1.6 கி.மீ நீளம், மாங்குளம் கிராமத்தில் ரூ.2.04 கோடியில் மாங்குளம்-காந்திநகர் வரை 2 கி.மீ நீளம், வெள்ளியன் குன்றம் புதூர் கிராமத்தில் ரூ.1.87 கோடியில் வி.புதூர் முதல் அந்தமான் சாலை வரை 2 கி.மீ நீளம் என மொத்தம் ரூ.5.28 கோடி மதிப்பீட்டில் 5.6 கி.மீ நீளம் உள்ள 3 தார்சாலைகள் மேம்பாட்டு பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த பணிகளை விரைவாகவும், தரமாகவும் நிறைவேற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.


Next Story