சேலம் மாவட்டத்தில் 86 ஊராட்சிகளில் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் தொடக்கம்


சேலம் மாவட்டத்தில் 86 ஊராட்சிகளில் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் தொடக்கம்
x

சேலம் மாவட்டத்தில் 86 ஊராட்சிகளில் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அயோத்தியாப்பட்டணத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் கார்மேகம் கலந்து கொண்டார்.

சேலம்

அயோத்தியாப்பட்டணம்:

சேலம் மாவட்டத்தில் 86 ஊராட்சிகளில் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அயோத்தியாப்பட்டணத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் கார்மேகம் கலந்து கொண்டார்.

வேளாண் வளர்ச்சி திட்டம்

தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தை நேற்று சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் 86 ஊராட்சிகள் முதற்கட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்டு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அயோத்தியாப்பட்டணத்தில் உள்ள அன்னை கஸ்தூரி பாய் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்ற இத்திட்டம் தொடக்க நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் கார்மேகம் கலந்து கொண்டார். அப்போது, காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிய உரையை கலெக்டர் மற்றும் அதிகாரிகள், பொதுமக்கள் பார்த்தனர்.

கடன் உதவி

இந்த நிகழ்ச்சியில், 13 பயனாளிகளுக்கு ரூ.9 ஆயிரத்து 770 மதிப்பில் மானியத்துடன் கூடிய இடுபொருட்கள் மற்றும் ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான மகளிர் சுய உதவிக்குழுக்கான கடன் உதவிகளை கலெக்டர் கார்மேகம் வழங்கினார். நிகழ்ச்சியில் கலெக்டர் கார்மேகம் பேசியதாவது:-

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் முக்கிய சிறப்பு அம்சமே கிராம அளவில் அரசுத் துறைகளின் அனைத்து நலத்திட்டங்களையும் ஒருங்கிணைத்து செயல்படுத்துவதுதான். அந்தவகையில், சேலம் மாவட்டத்தில் 86 கிராம ஊராட்சிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

திட்டங்கள்

இத்திட்டத்தின் கீழ், தென்னங்கன்றுகள், பயறுவகை விதைகள், தெளிப்பான்கள், வீட்டுத் தோட்டம் அமைக்க காய்கறி தொகுப்புகள், தோட்டக்கலை பயிர்சாகுபடிக்கு ஊக்கத் தொகை, நெகிழிக் கூடைகள், பழச்செடிகள், மரக்கன்றுகள் தொகுப்புகள், தரிசு நில தொகுப்புகளில் ஆழ்துளை மற்றும் குழாய்க்கிணறு அமைத்தல், ஆதிதிராவிட விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் கிணறு அமைத்து மின் மோட்டாருடன் நுண்ணீர் பாசன வசதி அமைத்தல், பண்ணைக்குட்டை அமைத்தல், சிறுபாசன குளங்கள், குளங்கள், ஊரணிகள், வரத்து கால்வாய்கள் தூர்வாருதல், கால்நடைகளின் நலன் காத்து பால் உற்பத்தியை பெருக்குதல், பயிர் கடன் வழங்குதல், சமுதாயக் காடுகள் உருவாக்குதல் போன்ற செயல்பாடுகள் இக்கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்படும். மேலும், சேலம் மாவட்டத்தில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களில் உள்ள உழவர்களை ஒருங்கிணைத்து, உழவர் உற்பத்தியாளர்கள் குழுக்கனை உருவாக்கி, தேவையான தொழில்நுட்ப பயிற்சிகள் அளித்து வேளாண்மை - உழவர் நலத்துறை உள்ளிட்ட பல துறைகளின் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வம், வேளாண்மை இணை இயக்குனர் கணேசன், வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சரஸ்வதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இளங்கோ, சிராஜூதீன், அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் புவனேஸ்வரி, வட்டார அட்மா திட்ட தலைவர் விஜயகுமார், மாசிநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மேகலா உள்பட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story