வலி இல்லாமல் மரண தண்டனை சாத்தியமா?; முன்னாள் நீதிபதி, வக்கீல்கள், சமூக ஆர்வலர்கள் கருத்து


வலி இல்லாமல் மரண தண்டனை சாத்தியமா?; முன்னாள் நீதிபதி, வக்கீல்கள், சமூக ஆர்வலர்கள் கருத்து
x
தினத்தந்தி 29 March 2023 2:00 AM IST (Updated: 29 March 2023 2:00 AM IST)
t-max-icont-min-icon

வலி இல்லாமல் மரண தண்டனை சாத்தியமா? என்பது குறித்து முன்னாள் நீதிபதி, வக்கீல்கள், சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

திண்டுக்கல்

நமது நாட்டில் கொடூரமான குற்ற வழக்குகளில் அரிதிலும் அரிதாகத்தான் மரண தண்டனை வழங்கப்படுகிறது. மரண தண்டனையை எப்படி வழங்க வேண்டும் என்று ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. கழுத்தில் கயிற்றைக் கட்டி தூக்கிலிட வேண்டும் என்றும், இதுதான் குறைவான வலியுடன் மரணத்தைத் தரக்கூடியது என்றும் முடிவு செய்து 1888 மற்றும் 1898-ம் ஆண்டுகளிலும், நாடு விடுதலைக்கு பின்னர் 1973-ம் ஆண்டிலும் குற்றவியல் விசாரணை முறை சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன.

விஷ ஊசி போடுவது, மின்சாரம் பாய்ச்சுவது, விஷவாயு அறைக்குள் வைத்து பூட்டுவது போன்ற முறையில் மரண தண்டனையை நிறைவேற்றுவது அதிக வலியை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் அறிக்கைகள் தெளிவாக கூறுகின்றன.

குறைவான வலியுடன் மரண தண்டனை

1983-ம் ஆண்டு தீனதயாள் வழக்கில், தூக்கில் போட்டு மரண தண்டனையை நிறைவேற்றுவதே வலியில்லா மரணத்தை ஏற்படுத்தும் முறை என்றும் சுப்ரீம் கோர்ட்டு தெளிவுபடுத்தி உள்ளது.

ஆனால், விருத்தாச்சலம் சிறுவன் கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற சுந்தர்ராஜன் என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, அவரது தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றி உத்தரவிட்டது.

அந்த வழக்கில், மரண தண்டனை நிறைவேற்றுவது குறித்து கருத்துகளை சுப்ரீம் கோர்ட்டு பதிவு செய்துள்ளது.

தூக்கில் போடும்போதும் சில நொடிகள் துடிதுடித்துத்தான் சம்பந்தப்பட்ட நபர் மரணம் அடைகிறார். மரணத்தில் கண்ணியம் காக்கப்பட வேண்டும். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்துள்ள இந்த காலகட்டத்தில் குறைவான வலியுடன் மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டும். அதுகுறித்து மத்திய அரசு ஆய்வு செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது.

அதே கருத்துப்பட கடந்த 21-ந் தேதியும் ஒரு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு யோசனை கூறி இருக்கிறது. டெல்லியை சேர்ந்த வக்கீல் ரிஷி மல்கோத்ரா என்பவர் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்து இருந்தார்.

மரண தண்டனையை வலி இல்லாமல் நிறைவேற்ற மாற்று வழிகளை கையாள வேண்டும் என்று அதில் வலியுறுத்தி இருந்தார்.

தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு அந்த மனுவை விசாரித்தது.

மனுதாரரின் கருத்தோடு நீதிபதிகள் உடன்பட்டதுடன், "தூக்கிலிடுவதற்கு மாற்றாக நமது நாட்டிலோ அல்லது வெளிநாடுகளிலோ ஏதேனும் தரவுகள் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய, தேசிய சட்ட பல்கலைக்கழக நிபுணர்கள், எய்ம்ஸ் மருத்துவர்கள், விஞ்ஞானிகள் அடங்கிய ஒரு குழுவை நியமிக்கலாம்" என்றும் மத்திய அரசுக்கு சிபாரிசு செய்து இருக்கிறது.

சுப்ரீம் கோர்ட்டின் இந்த கருத்து குறித்து முன்னாள் நீதிபதிகள், வக்கீல்கள், பொதுமக்கள் தங்களது கருத்துகளை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

அதன் விவரம் வருமாறு:-

வலி இருக்கும்

ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதி டி.அரிபரந்தாமன்:-

மரண தண்டனையே வேண்டாம் என்பதுதான் எங்களது கருத்து. வளர்ந்த நாடுகளில் மரண தண்டனை முற்றிலும் நீக்கப்பட்டு விட்டது. இப்போது பார்க்கும்போது, ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பகத்சிங் உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டு சாதாரணமானதுதான். அதேநேரம், பில்கிஸ் பானு வழக்கில் கற்பழிப்பு, கொலை என்று கொடூரமான குற்றச்சாட்டுகளில் சிக்கியவர்கள் குறைவான தண்டனையுடன் 14 ஆண்டுகளுக்கு பின்னர் வெளியில் வந்துவிட்டனர்.

எனவே, பண்டைய காலம் போல் மரண தண்டனை எளிதாக விதிக்கப்படுவது இல்லை என்றாலும் தவறு செய்பவன் திருந்த வேண்டும். அதற்கு ஏற்ப தண்டனை இருக்க வேண்டும். குற்றத்தை குறைப்பதற்கான காரணிகளை அரசு ஆய்வு செய்ய வேண்டும். மரண தண்டனை விதிப்பதால் குற்றங்கள் குறையவில்லை. இதனால்தான் வளர்ந்த நாடுகள் மரண தண்டனை வேண்டாம் என்கிறது. அதுபோன்ற கோரிக்கை நம் நாட்டில் வலுக்கவில்லை என்பதால், தண்டனையை நிறைவேற்ற மாற்று வழிகளைத் தேட வேண்டியதுள்ளது. எனவே, மரண தண்டனை வேண்டுமா? வேண்டாமா? என்பதை நாடாளுமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும். மரணம் என்பதை எந்த வழிகளில் நிறைவேற்றினாலும் வலி இருக்கத்தான் செய்யும்.

மரண தண்டனை அவசியம்

முன்னாள் உதவி சொலிசிட்டர் ஜெனரல் மூத்த வக்கீல் ஜி.கார்த்திகேயன்:- கொடூரமான குற்ற வழக்குகளில் அரிதிலும் அரிதாகத்தான் மரண தண்டனை விதிக்கப்படுகிறது. எதற்காக இந்த தண்டனை வழங்கப்படுகிறது என்பதைத்தான் பார்க்க வேண்டும். கொடூரமான எண்ணங்கள் கொண்டு, கொடூரமாக கொலை, கற்பழிப்பு உள்ளிட்ட கடும் குற்றங்களை செய்பவன் திருந்தவே மாட்டான். அவன் ஒழுக்கமான, அமைதியான சமுதாயத்தில் வாழ தகுதியில்லாதவன். மனநோயாளியான அவனால் பிறருக்கு துன்பம் வரும், ஆபத்து வரும் என்று கருதும்பட்சத்தில் திருந்தாத அந்த நபருக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. கொடூரக் குற்றத்துக்கு இந்த தண்டனை அவசியம்.

மரண தண்டனையை தூக்குப்போட்டு நிறைவேற்றுவது வலி குறைவானது என்று முன்பு கருதப்பட்டது. ஆனால், இப்போது தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது. தலீபானைப் போல குற்றவாளியின் பின்தலையில் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லலாம். விடுதலைப்புலிகள் தற்கொலை படையினர் ஒருகாலத்தில் பயன்படுத்தியது போல, ஒரு நொடியில் மரணம் அடையும் சயனைடை பயன்படுத்தலாம். சயனைடு ஊசி போட்டு மரண தண்டனையை நிறைவேற்றலாம். இவையெல்லாம் குறைவான வலியுடன், சில நொடிகளில் மரணத்தைத் தரக்கூடியதுதான். வளர்ந்த நாடுகளை ஒப்பிடுவதை தவிர்த்துவிட்டு, நம் நாட்டில் மரண தண்டனை அவசியம் வேண்டும்.

மிகப்பெரிய அநீதி

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருந்து விடுதலையான நளினி:- சுப்ரீம் கோர்ட்டின் இந்த கருத்தை முழு மனதாக வரவேற்கிறேன். இதுநாள் வரை ஆயுதங்களையோ, துப்பாக்கி ரவையையோ நான் பார்த்தது கூட கிடையாது. ஆனால், சர்வதேச பயங்கரவாதி போல நடத்தப்பட்டேன். சி.பி.ஐ., கூறும் குற்றச்சாட்டுகளை எல்லாம் அப்படியே ஏற்றுக்கொண்டு தூக்கு தண்டனை கொடுத்தார்கள். அதன்படி தூக்கில் போட்டு இருந்தால் மிகப்பெரிய அநீதி ஏற்பட்டு இருக்கும்.

இப்போது என் கணவர் முருகன் என்ற ஸ்ரீஹரன், சாந்தன் உள்ளிட்டோர் உயிரோடு இருக்கின்றனர். அவர்களை பார்த்து அவர்களது உறவினர்கள் மகிழ்ச்சி அடைகின்றனர். எங்களை பொறுத்தவரை மரண தண்டனை ஒரு கொடூரமானது. அதை ஒழிக்க வேண்டும்.

இப்போது, சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ள கருத்தை பார்க்கும்போது, மரணம்கூட குறைவான வலியுடன் நிகழவேண்டும் என்று கருதுகிறது. இதன்மூலம் அந்த நீதிபதிகளின் மென்மையான உணர்வுகள் வெளிப்படுகின்றன.

இதுகுறித்து திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த வக்கீல்கள், சமூக ஆர்வலரிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:-

மாற்றிட தேவை இல்லை

வக்கீல் சதீஷ்குமார் (திண்டுக்கல்) :- பயங்கர கொலை குற்றத்தில் ஈடுபடும் நபர்களுக்கு மட்டுமே மரண தண்டனை வழங்கப்படுகிறது. அதுவும் மிகவும் அரிதான வழக்குகளில் தான் மரண தண்டனை வழங்கப்பட்டு வருகிறது. கொலை குற்றம் மட்டுமின்றி சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தல், பயங்கரவாத செயல்கள், சமூக விரோத செயல் ஆகிய குற்றங்களுக்கும் மரண தண்டனை வழங்க வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம். தண்டனைகள் அதிகமானால் தான் குற்றங்கள் குறையும். எனவே மரண தண்டனை என்பது அவசியம். நமது நாட்டில் மரண தண்டனை விதிக்கப்படும் குற்றவாளிகள் தூக்கிலிடப்படுகின்றனர். வெளிநபர்கள் யாரும் பார்க்காத வகையில் தனி அறையில் தூக்கிலிடப்படுகிறது. எந்த முறையில் உயிரை பறித்தாலும் வலிதான் ஏற்படும். எனவே இந்த தண்டனை முறையை மாற்றிட தேவை இல்லை.

புதிய கண்டுபிடிப்பு

வக்கீல் சுதந்திரதேவி (திண்டுக்கல்) :- மரண தண்டனை மிகவும் அரிதான வழக்குகளில் மட்டுமே நிறைவேற்றப்பட வேண்டும் என்பது நமது நாட்டு சட்டங்களில் தற்போதைய நிலைப்பாடு ஆகும். அதேநேரம் மரண தண்டனையை முற்றிலும் நீக்க வேண்டும் என்று மனித உரிமை ஆர்வலர்கள் பரவலாக குரல் கொடுத்து வருகின்றனர். இதற்கிடையே வலியற்ற மரண தண்டனை எது என்பது பற்றி தற்போது விவாதங்கள் எழுந்து உள்ளன. தூக்கு தண்டனை காட்டு மிராண்டித்தனமானது என்று கருதி அமெரிக்கா முதலான நாடுகள் தூக்கு தண்டனையை ரத்து செய்துவிட்டன. ஆனால் நமது நாட்டில் தூக்குதண்டனை தான் அமலில் இருக்கிறது. சில நாடுகளில் மின்சாரத்தை பாய்ச்சி மரண தண்டனை வழங்குவது அமலில் இருக்கிறது. ஆனால் அதுவும் மிகுந்த வலிதரும் ஒன்றாகவே கருதப்படுகிறது. தற்போது அமெரிக்காவை சேர்ந்த ஓர் அறிவியல் அமைப்பு இது சம்பந்தமாக ஒரு புதிய கண்டுபிடிப்பை செய்துள்ளது. குற்றவாளி ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும்போது ஒருவகையான அமிலத்தை குழாய்களின் வழியாக நீராவியை போன்று செலுத்தி உடலில் கலக்குமாறு செய்தால் வலியற்ற மரணம் ஏற்படும் என்று கண்டுபிடித்துள்ளனர். நம் நாட்டில் அதை முயற்சி செய்து பார்க்கலாம். மரண தண்டனை கவுரவமானது அல்ல என்ற போதும் அதையே கவுரவமான முறையில் நிறைவேற்றுவது நாகரீக சமுதாயம் உருவாக முதல்படியாக இருக்கும்.

வலியில்லாத தண்டனை

சமூக ஆர்வலர் சுகுமார் (வேடசந்தூர்) :- இந்தியாவில் மிகவும் அரிதாக தான் மரண தண்டனை விதிக்கப்படுகிறது. இந்தியாவில் கடைசியாக நிர்பயா வழக்கில் தொடர்புடைய 4 குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டனர். மரண தண்டனை முதன்முதலாக துப்பாக்கியால் சூடப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அதன்பின்னர் அந்த முறை மாற்றப்பட்டு தூக்கு கயிற்றில் சாகும்வரை தொங்கவிடும் நடைமுறை தற்போது அமலில் உள்ளது. இதை விட வலி இல்லாமல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்றால் விஷஊசி செலுத்தி உயிரிழக்க செய்யும் வழிமுறையை கொண்டு வரலாம். இது தொடர்பான ஆய்வில் ஈடுபட்டு வலியில்லாத மரண தண்டனை வழங்கலாம்.

வக்கீல் அம்சவள்ளி (நத்தம்) :- குற்றங்களை தடுக்க தண்டனை வழங்குவது மிகவும் அவசியம். இதில் கொடுங்குற்றத்தில் ஈடுபடும் நபர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படுகிறது. அதுவும் முக்கிய வழக்குகளில் மட்டுமே மரண தண்டனை வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் மரண தண்டனை விதிக்கப்படும் குற்றவாளிகள் தூக்கிலிடப்படுகின்றனர். உயிர் போகும் போது வலி ஏற்படுவது இயற்கை தான். ஒருசில நாடுகளில் மரண தண்டனை மிகவும் கடுமையாக இருக்கிறது. நமது நாட்டில் அவ்வாறு இல்லாத போதிலும், வலியில்லாமல் மரண தண்டனை கொடுக்க சாத்தியக்கூறுகள் இருந்தால், பரிசீலனை செய்யலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Related Tags :
Next Story