பள்ளி, கல்லூரிகளில் பாலியல் குற்றங்களைத் தடுப்பது எப்படி?; கல்வியாளர், உளவியல் ஆலோசகர்கள் கருத்து


பள்ளி, கல்லூரிகளில் பாலியல் குற்றங்களைத் தடுப்பது எப்படி?; கல்வியாளர், உளவியல் ஆலோசகர்கள் கருத்து
x
தினத்தந்தி 8 April 2023 2:30 AM IST (Updated: 8 April 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

பள்ளி, கல்லூரிகளில் பாலியல் குற்றங்களைத் தடுப்பது எப்படி? என்பது குறித்து கல்வியாளர், உளவியல் ஆலோசகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

திண்டுக்கல்

காலங்கள் கடந்தபோதும், நாகரிகங்கள் வளர்ந்தபோதும் பெண்களின் மீதான வன்முறைகளும், பாலியல் தாக்குதல்களும் குறைந்தபாடில்லை.

வரதட்சணை, தொடுதல், பாலியல் வன்கொடுமை, பாலியல் வன்கொடுமைக்கான முயற்சிகள் என பெண்களின் மீதான தாக்குதல்கள் என்பது நீண்டுகொண்டே செல்கின்றன.

பள்ளிகள், கல்லூரிகள் என எங்கு சென்றாலும் சொல்ல முடியாத துயரத்தை பெண்கள் அனுபவித்து வருகிறார்கள்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான துன்புறுத்தல்கள் குறித்தான புகார்கள் அதிகரித்திருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தேசிய மகளிர் ஆணையம் தகவலும் தெரிவித்திருந்தது.

பாலியல் குற்றங்கள்

இந்தியாவில் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க போக்சோ சட்டம் உள்ளது. 18 வயதுக்கு கீழ் உள்ள அனைத்து குழந்தைகளும் பாலின வித்தியாசமின்றி, இச்சட்டத்தின் வரையறைக்குள் வருவார்கள். ஆனால், பள்ளிகளில் இதுகுறித்த விழிப்புணர்வு இல்லாததால் பல பள்ளி மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும்போதும் வெளியே சொல்லப்பயப்படுகிறார்கள்.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் கடந்த 5 ஆண்டுகளை காட்டிலும் கணிசமாக அதிகரித்து இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

பள்ளி, கல்லூரிகளில்...

சமீப காலமாக பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் நடைபெறும் பாலியல் துன்புறுத்தல் குறித்த சம்பவங்களும், புகார்களும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. எனவே, பாலியல் துன்புறுத்தல்கள் பற்றியும், அவற்றை எவ்வாறு தடுப்பது என்பது குறித்தும் விழிப்புணர்வு சிறு வயதில் இருந்தே பெண் பிள்ளைகளிடம் ஏற்படுத்துவது அவசியம் ஆகிறது.

இதுகுறித்து பல்வேறு தரப்பினர் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

அரசு மனநல காப்பகத்தின் பேராசிரியரும், டாக்டருமான பூர்ண சந்திரிகா:-

சிறு வயதில் இருந்தே பாலின சமத்துவம் என்றால் என்ன என்று சொல்லித்தர வேண்டும். பாலின சமத்துவத்தை நோக்கி நமது பயணம் இருக்க வேண்டும். சிறு வயதில் இருந்தே தொடுதலில் சரி எது? தவறு எது? என்பது குறித்து சொல்லித்தர வேண்டும். இதை வெளியில் சொல்வதற்கு அவர்களுக்கு தைரியத்தை கொடுக்க வேண்டும். மாணவி சோகமாக இருந்தால் என்ன நடந்தது என்று முதலில் கேட்க வேண்டும். அதை பக்குவமாக எதிர்கொள்ள வேண்டும். சமூக மாற்றத்திற்கான முதல் அடி வீட்டில் இருந்தே ஆரம்பிக்க வேண்டும். பெண்ணையும், ஆணையும் சமமாக பார்க்கும் நிலை வந்துவிட்டாலே போதும் இந்த நிலை மாறும்.

அச்சுறுத்தல்கள்

பெண் தானே என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற மனநிலை மாற வேண்டும். உடல் அமைப்பை கிண்டல் செய்தால் அவர்களை எதிர்த்து கேள்வி கேட்பது போல் பாலியல் ரீதியான அச்சுறுத்தல்கள் மீதும் எதிர்த்து குரல் கொடுக்கும் மனநிலை மாணவிகளுக்கு வரவேண்டும். சில இடங்களில் வீட்டிலேயே பாலியல் ரீதியான துன்புறுத்தல் நடப்பதால் அதை வெளியே சொல்ல பயப்படுகிறார்கள். எது நடந்தாலும் தைரியமாக வெளியே சொல்ல வேண்டும்.

பெண் பிள்ளை தான் பாதிக்கப்பட்டது குறித்து வெளியே சொல்லி பின்னரும் அவருக்கு தொடர்ந்து பாதுகாப்பாக அரணாக நாம் இருக்க வேண்டும். மாணவர்கள் மட்டுமில்லாமல் ஆசிரியர்களுக்கும் உளவியல் ரீதியான வகுப்புகள் எடுக்க வேண்டும். பாலியல் துன்புறுத்தல் பெண் குழந்தைகளுக்கு நடப்பது போல் ஆண் குழந்தைகளுக்கும் 18 சதவீதம் நடப்பதாக ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டு உள்ளது. எனவே, இருவருக்கும் பாலியல் ரீதியான விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம்.

தற்கொலை

தமிழ்நாடு மாணவர்-பெற்றோர் நல சங்கத்தின் மாநில தலைவர் அருமைநாதன்:-

உளவியல் ரீதியாக மாணவர்களை, ஆசிரியர்கள் எதிர்கொள்வது மட்டுமே இதற்கு தீர்வாக அமையும். ஒவ்வொரு பள்ளிக்கும், கல்லூரிக்கும் உளவியல் ஆசிரியர்களை அரசே நியமிக்க வேண்டும். தற்போது இருக்கும் மாணவர்கள் சின்ன அவமானத்தையோ, ஏமாற்றத்தையோ தாங்க முடியாத நிலையில்தான் வளர்கிறார்கள். ஒரு சின்ன அவமானம் ஏற்பட்டவுடன் தற்கொலை செய்துகொள்ளும் மனநிலையில் தான் இருக்கிறார்கள். பள்ளிகளிலோ, கல்லூரிகளிலோ எந்த பிரச்சினை நடந்தாலும் அதை வெளியில் கொண்டுவருவதில்லை. ஆசிரியர்கள், பெற்றோர்களிடம் பிரச்சினையை சொன்னால் நம்மைத்தான் தவறாக நினைப்பார்கள் என்று நினைத்துக்கொள்கிறார்கள்.

பாலியல் குற்றங்களுக்கு தண்டனை மட்டுமே தீர்வு கொடுக்காது. தண்டனை கொடுத்தாலும் இதை சரிசெய்ய முடியாது. பாலியல் என்பது உளவியல் ரீதியான ஒன்று. சமுதாய மனநிலை மாறவேண்டும். பள்ளியில் இருந்தே மாணவ, மாணவிகளிடம் உளவியல் ரீதியாக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். நாள்தோறும் உளவியல் ரீதியான விஷயங்களை பேச வேண்டும். அரசு செலவினம் பார்க்காமல் ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு உளவியல் ஆலோசகரை ஆசிரியராக நியமிக்க வேண்டும். இதேபோல, மாணவர்களை எப்படி கையாள வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும். இதற்கான பயிற்சிகளை வழங்க வேண்டும். கோடை விடுமுறை நாட்களில் பெற்றோர்களை அழைத்து அவர்களுக்கும் இதுசம்பந்தமாக வகுப்புகளை எடுக்க வேண்டும். இதுபோன்ற வழிமுறைகள் மட்டுமே இதற்கு ஒரு தீர்வாக அமையும்.

பெற்றோருக்கும் விழிப்புணர்வு

மதுரை ஐகோர்ட்டு வக்கீல் சாதனா:- பள்ளிகளில் பாலியல் கல்வியை அவசியமாக்க வேண்டும். பாலியல் தொல்லை பற்றிய தெளிவை ஏற்படுத்தி, புகார் கூறும்படி நம்பிக்கை அளிக்க வேண்டும். பாலியல் வன்முறைகள் குறித்து பள்ளிகளுக்கு சென்று போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். அதேபோல் பாலியல் பிரச்சினைகளை மாணவிகள் மனம்விட்டு தெரிவிக்க பள்ளி, கல்லூரிகளில் தன்னார்வலர்கள் இருக்க வேண்டும்.

பஸ் நிறுத்தம், பஸ்களில் மாணவிகளுக்கு ஏற்படும் தொந்தரவுகளை உடனே தெரிவிக்க வாய்ப்பு இருக்க வேண்டும். பாலியல் தொல்லைகளை வெளியே கூறினால் அவமானம் எனக்கூறி ஒருசில பெற்றோரே மறைக்கின்றனர். இதனால் அடுத்த முறை தொல்லை ஏற்பட்டால் மாணவிகள் வெளியே சொல்ல தயங்குவார்கள். அது பெரிய அளவில் பாதிப்பை உருவாக்கிவிடும். எனவே பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியதும் அவசியம்.

மனசாட்சியாக மாறுங்கள்

சட்டக்கல்லூரி மாணவி ஜெசிகா மெரில்நிவேதிகா:- பெண் பிள்ளைகளின் மீது முதலில் பெற்றோர் நம்பிக்கை வைக்க வேண்டும். பெண் பிள்ளைகளின் குணத்தை அறிந்து அதற்கேற்ப பிரச்சினைகளை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். அதோடு பிரச்சினைக்கு பெண் பிள்ளைகளும் காரணம் எனும் மனோபாவத்தில் பேசக்கூடாது. இதனால் பெண் பிள்ளைகள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை வெளியே கூறுவதற்கு தயக்கம் காட்டுவார்கள்.

பெண் பிள்ளைகளின் மனசாட்சியாக பெற்றோர் மாறிவிட்டால் எந்த சிக்கலையும் உடனுக்குடன் தெரிந்து கொண்டு தீர்வு காணமுடியும். பள்ளி, கல்லூரிகள் மற்றும் வெளியே செல்லும் இடங்களில் பிரச்சினை ஏற்படும் சூழல்களை தெளிவுபடுத்த வேண்டும். இதற்கெல்லாம் மேல் ஆண் பிள்ளைகளை ஒழுக்கத்துடன் வளர்க்க வேண்டும். வீட்டில் பெண், ஆண் பாகுபாடு இல்லாமல் ஒழுக்கத்துடன் வளர்ப்பதோடு, பிரச்சினைகளை கூறுவதற்கு அவகாசம் அளிக்க வேண்டும்.

மாதந்தோறும் விழிப்புணர்வு

தமிழக ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் வின்சென்ட் பால்ராஜ்:- மாணவ-மாணவிகளை நல்வழிப்படுத்தும் பொறுப்பு ஆசிரியர்களுக்கு அதிகமாக இருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் ஆசிரியர்களின் கைகள் கட்டப்பட்டு இருக்கின்றன. எனினும் சமுதாயத்துக்கு நல்ல மாணவர்களை தர வேண்டும் என்ற அக்கறையில் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். எனவே தவறு செய்பவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிகளில் மாதந்தோறும் மாணவ-மாணவிகளை தனியாக அமர வைத்து ஒழுக்கம், பாலியல் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

மாணவ-மாணவிகள் தங்களிடம் யாராவது தவறாக நடக்க முயன்றால் உடனே வகுப்பாசிரியர், தலைமை ஆசிரியர், பெற்றோர் என யாரிடமாவது தெரிவிக்க வேண்டும். இதன்மூலம் பிரச்சினைகளை தொடக்கத்திலேயே கண்டறிந்து தடுக்க முடியும். ஆசிரியர்கள், பெற்றோர்கள் மாணவர்களிடம் நெருங்கி பழகினால் பிரச்சினைகளை எளிதில் தெரிந்து கொள்ள முடியும். மாணவ-மாணவிகளும் பெற்றோர், ஆசிரியர்களை நம்பி பிரச்சினைகளை தெரிவிக்க வேண்டும்.

துணிந்து எதிர்கொள்ளுங்கள்

பழனியாண்டவர் மகளிர் கலை-அறிவியல் கல்லூரி முதல்வர் புவனேஸ்வரி:- கல்லூரிக்கு வரும் போதும், வீட்டுக்கு திரும்பி செல்லும் போதும் பாலியல் தொல்லை ஏற்பட்டால், மாணவிகள் பெற்றோர் அல்லது பேராசிரியர்கள், முதல்வரிடம் தெரிவிக்க வேண்டும். இதுபற்றி மாணவிகளுக்கு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறோம்.

அதேபோல் யாரேனும் தவறாக நடந்து கொண்டால், அதில் இருந்து பெண்கள் எவ்வாறு தங்களை பாதுகாத்து கொள்வது என்றும் மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளோம். எனவே மாணவிகள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை துணிந்து எதிர்கொள்ள வேண்டும். அதன்மூலம் தான் பிரச்சினைகளை சமாளித்து வாழ்வில் சாதிக்க முடியும். பெண்கள் எந்த சூழலிலும் தன்னம்பிக்கை, தைரியத்தை கைவிடக்கூடாது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Related Tags :
Next Story