சிதம்பரம் நடராஜர் கோவில் குறித்து கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை இன்றும், நாளையும் தெரிவிக்கலாம் - இந்து சமய அறநிலையத்துறை
சிதம்பரம் நடராஜர் கோவில் குறித்து கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை இன்றும், நாளையும் தெரிவிக்கலாம் என இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
கடலூர்,
உலக பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலை பொது தீட்சிதர்கள் நிர்வாகம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இக்கோவிலில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதன்பிறகு அரசு உத்தரவுபடி தற்போது பக்தர்கள் கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இதற்கிடையே கடந்த 7,8-ந்தேதிகளில் சிறப்பு அதிகாரி சுகுமாறன் தலைமையில் இணை, துணை ஆணையர்கள், தணிக்கை அதிகாரி கொண்ட குழுவினர் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆய்வு செய்வதற்காக வந்தனர். இதற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்து, அவர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை. மாறாக நீங்கள் சட்ட ரீதியான குழு இல்லை என்றும், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி அமைக்கப்பட்ட குழு அல்ல என்றும் கூறி, வரவு- செலவு கணக்குகளை ஒப்படைக்க தீட்சிதர்கள் மறுத்து விட்டனர்.
இந்த நிலையில் சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகம் குறித்து விசாரணை நடத்த பக்தர்கள் ஆலோசனை வழங்கலாம் என்று இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் ஜோதி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அதன்படி, கோவில் நலனில் அக்கறை உள்ள நபர்கள் தங்கள் கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை இன்றும், நாளையும் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை கடலூர் புதுப்பாளையம் ஆற்றங்கரை தெருவில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகம், துணை ஆணையர், ஒருங்கிணைப்பாளரிடம் நேரில் கருத்துகளை அளிக்கலாம் அல்லது அஞ்சல் மற்றும் vocud.hrce@tn.gov.in என்ற மின்னஞ்சல் மூலமாகவும் மாலை 3 மணிக்குள் கருத்துகளை அனுப்பலாம் என கூறப்பட்டுள்ளது.