குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையக்குழு 10-ந் தேதி வருகை


குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையக்குழு 10-ந் தேதி வருகை
x

ஜமுனாமரத்தூருக்கு குழந்தைகள் பாதுகாப்பு ஆணையக்குழு 10-ந் தேதி வருகிறது.

திருவண்ணாமலை

ஜமுனாமரத்தூருக்கு குழந்தைகள் பாதுகாப்பு ஆணையக்குழு 10-ந் தேதி வருகிறது.

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய சட்டம் 2007-ன் கீழ் உருவாக்கப்பட்டு உள்ள தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் என்பது ஒரு சட்டப்பூர்வமான மத்திய அரசின் அமைப்பாகும். இந்த ஆணையத்தின் முக்கிய நோக்கம் அரசியலமைப்புச் சட்டம் மற்றும் பிற சட்டங்கள் வாயிலாக குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்டு உள்ள உரிமைகள் அனைத்தினையும், குழந்தைள் முழுமையாக பெற்று பயனடையச் செய்வதே ஆகும்.

ஜமுனாமரத்தூர் தாலுகாவிற்கு வரும் குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய குழுவினர் குழந்தைகள் தொடர்பான அனைத்து அடிப்படைத் தேவைகள் மற்றும் உரிமைத் தேவைகள் ஆகியவற்றினை பூர்த்தி செய்யும் வகையில் குறைதீர்வு கூட்டத்தை நடத்துகின்றனர். இந்த குறைதீர்வு கூட்டம் வருகிற 10-ந் தேதி (செவ்வாய்கிழமை) ஜமுனாமரத்தூர் தாலுகா அலுவலகத்தில் காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது.

இதற்கான முன்பதிவுகள் அன்று காலை 8.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் குழந்தைகள், பெற்றோர், பாதுகாவலர், பராமரிப்பாளர் அல்லது குழந்தைகள் உரிமைகளுக்காக வேலை செய்யும் நபர் என யார் வேண்டுமானாலும் குறைதீர்வு கூட்டத்தில் கலந்து கொண்டு மனு கொடுத்து குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

இதில் பள்ளி குழந்தைகள், இல்ல குழந்தைகள், விடுதி குழந்தைகள், தெருவோர குழந்தைகள் மற்றும் வேறு இடங்களில் உள்ள கல்வி கற்றும் பயிற்சி பெறும் அல்லது தங்கியுள்ள குழந்தைகள் கலந்து கொண்டு தங்களது தேவையினை பூர்த்தி செய்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.


Next Story