உணவு பாதுகாப்புத்துறை ஆணையாளர் ரேஷன் கடையில் திடீர் ஆய்வு
காரைக்குடி அருகே உணவு பாதுகாப்புத்துறை ஆணையாளர் ரேஷன் கடையில் திடீர் ஆய்வு செய்தார்.
காரைக்குடி அருகே உணவு பாதுகாப்புத்துறை ஆணையாளர் ரேஷன் கடையில் திடீர் ஆய்வு செய்தார்.
திட்ட பணிகள் ஆய்வு
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்துத் துறைகளின் சார்பில் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் தொடர்பாக மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், உணவு பாதுகாப்புத்துறை ஆணையாளர் லால்வேனா மற்றும் மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் ஆகியோர் தலைமையில் கள ஆய்வு நடைபெற்றது. இதைதொடர்ந்து சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் அனைத்துத்துறை சார்ந்த முதல்நிலை அலுவலர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் உணவு பாதுகாப்புத்துறை ஆணையாளர் லால்வேனா பேசியதாவது:-
சிவகங்கை மாவட்டத்தில் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து நலத்திட்டங்களும் அனைத்து மக்களுக்கும் கிடைக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்களாக பல்வேறு துறைகள் சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அந்த ஆய்வு அறிக்கைகளுடன் தங்களது துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு பொதுமக்களின் தேவைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
ஆரம்ப சுகாதார நிலையம்
முன்னதாக காரைக்குடி மாதிரி மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு வழங்க உள்ள சைக்கிள்கள் தொடர்பாகவும், காரைக்குடி நகராட்சி மூலம் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் முத்துப்பட்டினத்தில் கட்டப்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிட பணிகளையும், ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் பருப்பூரணியில் கட்டப்பட்டு வரும் சமுதாய கழிப்பறை பணி, ரூ.41 லட்சம் மதிப்பீட்டில் செக்காலை தெப்பக்குளம் புனரமைப்பு பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர், கலெக்டர் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு நடத்தினர்.
காரைக்குடி தாசில்தார் அலுவலகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகள் மற்றும் வருவாய் துறை மூலம் வழங்கப்படும் சான்றிதழ்கள், காரைக்குடி அருகே கோவிலூரில் உள்ள ரேஷன் கடையின் செயல்பாடுகள், மகளிர் உரிமைத்தொகை வழங்கும் சிறப்பு முகாமில் குடும்ப தலைவிகளிடம் இருந்து விண்ணப்பம் பெறப்படும் பணி, கோவிலுார் அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு கற்பித்தல் முறை, கற்றலுக்கு தேவையான வழங்கப்பட்டுள்ள கல்வி உபகரணங்கள் தொடர்பாக ஆய்வு செய்தனர். மேலும் சிவகங்கை வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் செயல்பாடுகள் மற்றும் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள விவரங்கள் தொடர்பாகவும் ஆய்வு மேற்கொண்டனர். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) புஷ்பாதேவி, வருவாய் கோட்டாட்சியர்கள் சுகிதா (சிவகங்கை), பால்துரை (தேவகோட்டை) மற்றும் அனைத்துத்துறை அரசு முதல்நிலை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.