போலீஸ் நிலையங்களில் கமிஷனர் திடீர் ஆய்வு


போலீஸ் நிலையங்களில் கமிஷனர் திடீர் ஆய்வு
x

கோவை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் போலீஸ் நிலையங்களில் திடீர் என ஆய்வு செய்தார். அப்ேபாது விபத்து வழக்குகளை பதிவு செய்ய தாமதிக்ககூடாது என்று போலீசாருக்கு உத்தரவிட்டார்.

கோயம்புத்தூர்


கோவை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் போலீஸ் நிலையங்களில் திடீர் என ஆய்வு செய்தார். அப்ேபாது விபத்து வழக்குகளை பதிவு செய்ய தாமதிக்ககூடாது என்று போலீசாருக்கு உத்தரவிட்டார்.

பொதுமக்கள்

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கோவை மாநகரில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு புகார் கொடுக்க வரும் பொது மக்களின் குறைகளை பொறுமையுடனும், அக்கறையுடனும் கேட்டறிய வேண்டும். புகார்களின் தன்மைக்கு ஏற்ப எப்.ஐ.ஆர். (முதல் தகவல் அறிக்கை) அல்லது புகார் மனு ஏற்பு ரசீது சம்பந்தப்பட்ட நபருக்கு வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மனுவின் மீது எப். ஐ.ஆர். அல்லது புகார் ஏற்பு ரசீது வழங்காமல் இருந்தால் மாநகர உதவி போலீஸ் கமிஷனர் அல்லது சம்பந்தப்பட்ட சரக துணை போலீஸ் கமிஷனரை அணுகி புகார் தெரிவிக்கலாம். அவ்வாறு முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் பொதுமக்கள் கோவை மாநகர போலீஸ் கமிஷனரை அவரது அலுவலகத்தில் மதியம் 12 மணி முதல் 1 மணி வரை நேரில் பார்த்து புகார் அளிக்கலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

விபத்து வழக்கு

இந்த நிலையில்போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நேற்று காட்டூர் போலீஸ் நிலையம் மற்றும் போக்குவரத்து போலீஸ் நிலையங்களில் ஆய்வு செய்தார். அப்போது அங்கு வந்த பொதுமக்கள் ஒருவரிடம் விசாரணை நடத்தினார். விபத்து தொடர்பாக வந்து இருப்பதாகவும், வழக்குப் பதிவு செய்ய தாமதம் ஆவதாகவும் கமிஷனரிடம் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து கமிஷனர், போலீஸ் நிலையங்களில் விபத்து வழக்குப் பதிவுகளை தாமதிக்க கூடாது என்று போலீஸ் அதிகாரிகளிளுக்கு உத்தரவிட்டார். மேலும்பள்ளிகள் அருகே போக்குவரத்து நெரிசல், விபத்து ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறும் போலீஸ் கமிஷனர் வேண்டுகோள் விடுத்தார்.

போலீஸ்காரருக்கு பரிசு

கோவை உக்கடம் புல்லுக்காடு பகுதியில் மின்சார கம்பிகளை தரையில் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பெரியகடை வீதி போலீஸ் ஏட்டு செந்தில்குமார், அந்த பகுதியில் போக்குவரத்தை சிறப்பாக கவனித்து வருவதாக போலீஸ் கமிஷனரின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. இதைத் தொடர்ந்து கமிஷனர், ஏட்டு செந்தில்குமாரை கமிஷனர் அலுவலகத்துக்கு அழைத்து ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் அனைத்து போலீசாரின் குறைகள், குடும்ப பிரச்சினைகளை கேட்க அந்தந்த போலீஸ் நிலைய வாரியாக தனியாக கூட்டம் நடத்தப்பட உள்ளதாகவும் கமிஷனர் தெரிவித்துள்ளார்.


Next Story