பவானிசாகர் அணையில் கழிவுகள் கலப்பதை கண்டறிய குழு அமைப்பு;அமைச்சர் சு.முத்துசாமி பேட்டி


பவானிசாகர் அணையில் கழிவுகள் கலப்பதை கண்டறிய குழு அமைப்பு;அமைச்சர் சு.முத்துசாமி பேட்டி
x

பவானிசாகர் அணையில் கழிவுகள் கலப்பதை கண்டறிய தனிக்குழு அமைக்கப்பட்டு இருப்பதாக அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.

ஈரோடு

பவானிசாகர் அணையில் கழிவுகள் கலப்பதை கண்டறிய தனிக்குழு அமைக்கப்பட்டு இருப்பதாக அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.

கழிவு கலப்பு

அத்திக்கடவு-அவினாசி திட்டப்பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் ஈரோடு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது.

இந்த கூட்டத்துக்கு தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி தலைமை தாங்கினார். இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

பவானிசாகர் அணையில் கழிவுகள் கலப்பதாக வந்த புகார் தொடர்பாக மாவட்ட கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி உடனடி நடவடிக்கை எடுத்து உள்ளார். கழிவு கலப்பதாக கூறப்படும் இடங்கள் நமது ஈரோடு மாவட்டத்துக்கு உள்பட்ட பகுதியா என்பதை கண்டறிய கலெக்டரின் வழிகாட்டுதலின் பேரில் தனிக்குழு அமைக்கப்பட்டு இருக்கிறது. கழிவுகள் கலப்பது நமது வருவாய் மாவட்ட பகுதிக்கு உள்பட்டதாக இருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். அண்டை மாவட்ட பகுதிகளாக இருந்தால், அந்த மாவட்ட நிர்வாகம் மூலம் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

அனுமதி

தமிழ்நாட்டில் டி.டி.சி.பி. (அங்கீகரிக்கப்படாத மனைகள் மற்றும் லே-அவுட்களை முறைப்படுத்துதல்) அனுமதி, கோர்ட்டு வழிகாட்டுதல் மற்றும் தீர்ப்புகள் அடிப்படையில் முறையாக வழங்கப்பட்டு வருகிறது. எந்த தனியார் நிறுவனத்துக்கோ அல்லது தனி நபர்களுக்கோ விதிகளை மீறி அனுமதி வழங்கப்படுவதில்லை. அதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

2007-ம் ஆண்டு முன்பு அனுமதி பெறாமல் கட்டப்பட்ட வீடுகள், 2011-ம் ஆண்டுக்கு முன்பு அனுமதி பெறாமல் கட்டப்பட்ட நிறுவன கட்டிடங்கள் ஆகியவற்றை கோர்ட்டு வழிகாட்டுதலின் படி அனுமதி அளிக்க விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளன. இதற்கான காலக்கெடு ஏற்கனவே நிறைவடைந்த நிலையிலும் நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது. கல்லூரி கட்டிடங்கள் இதில் சேர்ப்பது பற்றிய சட்ட ஆலோசனைகள் பெறப்பட்டு வருகின்றன.

கொரோனா

தற்போதைய நிலையில் வீடுகள் கட்டும் பொதுமக்கள் சிரமமின்றி கட்டிட அனுமதி பெற வாய்ப்புகள் உள்ளது. ஒற்றை சாளர முறையில் சரியான ஆவணங்கள் இருந்தால் விரைவில் அனுமதி பெற முடியும். ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் மீது நடத்தப்படும் சோதனைக்கும், டி.டி.சி.பி. அனுமதிக்கும் எந்த தொடர்பும் இல்லை. தி.மு.க.வின் மறைந்த தலைவர் கருணாநிதி நினைவிடம் அமைக்கவே, உரிய ஆவணங்கள் பெறப்பட்ட பிறகே அனுமதி அளிக்கப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும், கொரோனா பரவலை தடுக்க ஈரோடு அரசு ஆஸ்பத்திரி, பெருந்துறை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் போதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. எனவே பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் அவர் கூறினார்.

பேட்டியின் போது ஈரோடு மாவட்ட கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் நாரணவ்ரே மனிஷ் ராவ், நீர்வளத்துறை செயற்பொறிளாளர் எஸ்.மன்மதன், பயிற்சி உதவி கலெக்டர் என்.பொன்மணி, பயிற்சி துணை கலெக்டர் காயத்திரி ஆகியோர் உடன் இருந்தனர்.


Related Tags :
Next Story