மனைவியுடன் தீக்குளிக்க வந்த ஓய்வு பெற்ற தபால் ஊழியரால் பரபரப்பு
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு மனைவியுடன் தீக்குளிக்க வந்த ஓய்வு பெற்ற தபால் ஊழியரால் பரபரப்பு ஏற்பட்டது.
குறைதீர்க்கும் நாள் கூட்டம்
பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். அப்போது கலெக்டர் அலுவலகத்துக்கு ஒரு ஆணும், பெண்ணும் சேர்ந்து மனு கொடுக்க வந்தனர். அவர்களை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சோதனை செய்தனர். அப்போது பெண்ணின் கைப்பையை வாங்கி போலீசார் சோதனை செய்தபோது, அதில் குடிநீர் பாட்டிலில் மண்எண்ணெய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் அந்த மண்எண்ணெய்யை பறிமுதல் செய்து அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் வேப்பந்தட்டை தாலுகா, தழுதாழை, அம்பேத்கர் தெருவை சேர்ந்த ஓய்வு பெற்ற தபால் ஊழியர் கணேசன்(வயது 63) என்பதும், அவர் தனது மனைவி விஜயாவுடன்(52) மனு கொடுக்க வந்தது தெரியவந்தது. கணேசனின் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோளத்தை 5 பேர் சேர்ந்து அறுவடை செய்தனர். அவர்களிடம் இதுகுறித்து கணேசன் தட்டி கேட்டதற்கு, அவர்கள் அவரை தகாதவார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்து சென்றனர்.
தீக்குளித்து தற்கொலை செய்வதற்காக...
அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கணேசன் அரும்பாவூர் போலீஸ் நிலையத்தில் ஏற்கனவே புகார் கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதனால் மனமுடைந்த கணேசன், விஜயா தம்பதியினர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்வதற்காக மண்எண்ணெய் கொண்டு வந்ததாக அவர்களிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். பின்னர் இது தொடர்பாக கணேசனும், விஜயாவும் கலெக்டரை சந்தித்து மனு கொடுத்து விட்டு சென்றனர். இந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பெரம்பலூர் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர் நலச்சங்கத்தின் தலைவர் பழனிவேல் ராஜா தலைமையில் அச்சங்கத்தினர் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்கு தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாடு நிறுவனம் அறிவித்துள்ள ஊதியம் மாற்றம் மற்றும் கொரோனா ஊக்க தொகையையும் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.
அடிப்படை வசதிகள் வேண்டும்
வேப்பூர் ஒன்றியம், புதுவேட்டக்குடி கிராம ஊராட்சியின் 7-வது வார்டு உறுப்பினர் கலாநிதி மனுக்களை மாலையாக அணிந்து கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவர் கொடுத்த மனுவில், புதுவேட்டக்குடி காலனியில் ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கும் பகுதியில் சாலை வசதி, குடிநீர் வசதி, கழிவுநீர் வடிகால் உள்ளிட்ட எந்தவொரு அடிப்படை வசதிகளையும் ஊராட்சி நிர்வாகம் செய்து கொடுக்கவில்லை. அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தார்.
மேலும் அவருடன் வந்திருந்த புதுவேட்டக்குடி காலனி மேற்கு தெருவை சேர்ந்த ராமச்சந்திரன் கொடுத்த மனுவில், பிரதம மந்திரியின் ஜல் ஜீவன் திட்டத்தில் மக்கள் பங்கு தொகை கட்டியும் இன்னும் குடிநீர் வரவில்லை. அந்த திட்டத்தில் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தார். காலனியை சேர்ந்த ஜெயக்குமார் கொடுத்த மனுவில், மயான கொட்டகையை சீரமைத்து தர வேண்டும் என்று கூறியிருந்தார். கார்த்திகேயன் கொடுத்த மனுவில், ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கும் பகுதியில் கழிவுநீர் வடிகால் வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கைகளை அடங்கிய மொத்தம் 229 மனுக்களை பெற்றார்.