ஓட்டப்பிடாரம் அருகே கிராமசபை கூட்டத்தில் பரபரப்பு;குறைகளை சுட்டிக்காட்டியபெண் மீது தாக்குதல்


தினத்தந்தி 16 Aug 2023 6:45 PM GMT (Updated: 16 Aug 2023 6:45 PM GMT)

ஓட்டப்பிடாரம் அருகே கிராமசபை கூட்டத்தில் குறைகளை சுட்டிக்காட்டிய பெண் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

தூத்துக்குடி

ஓட்டப்பிடாரம்:

சுதந்திர தின விழாவையொட்டி, தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே பி.துரைச்சாமிபுரத்தில் கிராமசபை கூட்டம், பஞ்சாயத்து அலுவலகம் முன்புள்ள பூங்காவில் நடந்தது. பஞ்சாயத்து தலைவர் மகேஸ்வரி தலைமை தாங்கினார். பஞ்சாயத்து செயலாளர் ராஜலட்சுமி மற்றும் வார்டு உறுப்பினர்கள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணித்தள ஒருங்கிணைப்பாளரான மாரிமுத்து மனைவி கவிதா (வயது 40) பேசுகையில், பொதுமக்களின் கோரிக்கைகள் மற்றும் குறைகளை சுட்டிக்காட்டினார்.

அப்போது தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட முன்னாள் ஒருங்கிணைப்பாளரான எல்லப்பன் மனைவி ரேவதி (38) தன்னை பற்றித்தான் கவிதா குறை கூறுவதாக கருதி எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் அவர், கவிதாவை சாதியை பற்றி அவதூறாக பேசி, செருப்பால் தாக்கியதாக கூறப்படுகிறது. உடனே அங்கிருந்தவர்கள் இரு பெண்களையும் சமாதானப்படுத்தினர்.

இதுகுறித்து பசுவந்தனை போலீஸ் நிலையத்தில் கவிதா அளித்த புகாரின்பேரில், ரேவதி மீது 3 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story