கிணத்துக்கடவில் பரபரப்பு: வீட்டுக்குள் அழுகிய நிலையில் இறந்து கிடந்த தனியார் நிறுவன ஊழியர்-போலீஸ் விசாரணை
கிணத்துக்கடவில் பரபரப்பு: வீட்டுக்குள் அழுகிய நிலையில் இறந்து கிடந்த தனியார் நிறுவன ஊழியர்-போலீஸ் விசாரணை
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு அண்ணா நகரை சேர்ந்தவர் தீபக் (வயது 58) இவரது மனைவி கவிதா (47). தீபக் கிணத்துக்கடவு அருகே உள்ள முள்ளுப்பாடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.. இவர்களது மகன் வினய்தீபக் (27) பெங்களூரில் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கவிதா கடந்த 9-ந்தேதி குஜராத்தில் உள்ள உறவினர் வீட்டு விஷேசத்திற்க்காக சென்றார்.
வீட்டில் தீபக் மட்டும் இருந்தார். தீபக் ஏற்கனவே உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த 16-ந் தேதி குஜராத்தில் இருந்து கவிதா தீபக்கிற்கு செல்போன் மூலம் அழைத்தார். அப்போது அவர் அழைப்பை ஏற்கவில்லை. இதனால் அக்கம் பக்கத்தினரை அங்கு சென்று பார்க்கும்படி செல்போனில் தெரிவித்தார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் தீபக்கின் வீட்டுக்கு சென்று கதவை தட்டினர். ஆனால் நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படவில்லை. ேமலும் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது.
அதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் இதுபற்றி கிணத்துக்கடவு போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு சென்று, வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது தீபக் அழுகிய நிலையில் இறந்து கிடந்தார்.
இதையடுத்து அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.