ஆலங்குளம் அருகே பரபரப்பு: 3 வயது குழந்தை மர்மச்சாவு


ஆலங்குளம் அருகே பரபரப்பு: 3 வயது குழந்தை மர்மச்சாவு
x
தினத்தந்தி 5 Jan 2023 12:15 AM IST (Updated: 5 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

ஆலங்குளம் அருகே, 3 வயது குழந்தை மர்மமான முறையில் இறந்தது. மருத்துவமனையில் குழந்தையை சேர்த்து விட்டு தப்பி ஓடிய பெற்றோரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

தென்காசி

ஆலங்குளம்:

ஆலங்குளம் அருகே, 3 வயது குழந்தை மர்மமான முறையில் இறந்தது. மருத்துவமனையில் குழந்தையை சேர்த்து விட்டு தப்பி ஓடிய பெற்றோரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

3 வயது குழந்தை

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சக்திவேல் என்ற திலீப்குமார் (வயது 30). இவர் அதே பகுதியை சேர்ந்த ஹேமலதா (22) என்ற பெண்ணை கடந்த 2018-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

பின்னர் இருவரும் வெளியூர்களில் தங்கி குடும்பம் நடத்தி வந்தனர். இந்த தம்பதிக்கு ஹாசினி (3) என்ற பெண் குழந்தை இருந்தது.

மருத்துவமனையில் அனுமதி

இந்த நிலையில் சக்திவேல் குடும்பத்துடன் பிழைப்பு தேடி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தென்காசி மாவட்டம் ஆலங்குளத்திற்கு வந்தார். அங்கு அண்ணாநகர் 3-வது தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தனர்.

சக்திவேல் அங்குள்ள சந்தையில் சுமை தூக்கும் தொழிலாளியாக ேவலைபார்த்தார். ஹேமலதா ஒரு ஜவுளிக்கடையில் வேலை செய்து வந்தார்.

இந்தநிலையில் குழந்தை ஹாசினி கடந்த 31-ந் தேதி வீட்டில் தவறி விழுந்ததாகக் கூறி, ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு பெற்றோர் கொண்டு வந்து சேர்த்தனர்.

குழந்தை சுய நினைவின்றி இருந்ததால் அங்கு முதலுதவிக்கு பின்னர் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவனைக்கு கொண்டு வரப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரிதாபமாக குழந்தை இறந்தது.

பெற்றோர் எங்கே?

இதுகுறித்து ஆலங்குளம் கிராம நிர்வாக அலுவலர் சங்கரலிங்கம் கொடுத்த புகாரின்பேரில் ஆலங்குளம் போலீசார், சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்தனர்.

இதற்கிடையே மருத்துவமனையில் குழந்தையுடன் இருந்த பெற்றோர் நேற்று முன்தினம் தலைமறைவாகி விட்டனர். தப்பி ஓடிய தம்பதியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

குழந்தை ஹாசினி சாவுக்கு காரணம் என்ன? என்பது பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். பெற்றோர் தாக்கியதில் அந்த குழந்தை இறந்ததா? என்ற கோணத்திலும் விசாரிக்கிறார்கள்.

குழந்தை மர்மமான முறையில் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.


Next Story