கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விராலிமலை சோதனைச்சாவடியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்ட்) விராலிமலை ஒன்றிய செயலாளர் (பொறுப்பு) மகாலிங்கம் தலைமை தாங்கினார். முத்துகுமார் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சண்முகம் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். ஆர்ப்பாட்டத்தில் விராலிமலை பகுதியில் வாழும் அனைத்து மக்களுக்கும் பாதுகாக்கப்பட்ட காவிரி குடிநீர் தினமும் வழங்க வேண்டும். கிராமப்புறத்தில் வாழும் குடிமனை இல்லாத மக்களுக்கு பட்டாவுடன் குடிமனை வழங்க வேண்டும். விராலிமலையில் பழுதடைந்து இருக்கும் கிளை நூலக கட்டிடத்தை மாற்றி புதிய நூலக கட்டிடம் வழங்க வேண்டும். பொய்யாமணி ஊராட்சி பொத்தப்பட்டி கிராமத்திற்கு பகுதி நேர ரேஷன் கடை கொண்டு வர வேண்டும். 100 நாள் வேலைதிட்டத்தில் வேலைக்கு வரும் ஏழைகளிடம் உங்களது ஆதார் எண் இணையவில்லை என கூறி வேலை கொடுக்காமல் திருப்பி அனுப்புவதை நிறுத்தி அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும். விராலிமலை ஒன்றியத்தில் தொழிற்சாலைகள் அதிகமாக இயங்குவதால் தொழிலாளர்கள் எளிதில் மருத்துவ வசதி பெற சொந்த கட்டிடத்தில் இ.எஸ்.ஐ. மருத்துவமனை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்ட்) நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உறுப்பினர் முரளி நன்றி கூறினார்.