இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட முயற்சி
கருகும் நெற்பயிர்களுக்கு தண்ணீர் திறந்துவிடக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
வேளாங்கண்ணி:
கீழையூர் ஒன்றியம் எட்டுக்குடி மற்றும் திருவாய்மூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் நேரடி நெல் விதைப்பு செய்த குறுவை நெற்பயிர்கள் கருகி வருகின்றன. இந்த பயிர்களை காப்பாற்ற உடனடியாக தண்ணீர் திறந்து விடக்கோரி எட்டுக்குடி கடைத்தெருவில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில குழு உறுப்பினர் செல்வம் தலைமையில் அக்கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த திருக்குவளை தாசில்தார் சுதர்சன், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் தங்கமுத்து, கீழையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேவதி ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் 3 நாட்களுக்குள் பயிர்களுக்கு தண்ணீர் பெற்று தருவதாக பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் உறுதி அளித்தார்.இதை தொடர்ந்து அவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.