இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து கோவையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பழங்குடியின மக்கள் இசை கருவிகளுடன் கலந்து கொண்டனர்.
மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து கோவையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பழங்குடியின மக்கள் இசை கருவிகளுடன் கலந்து கொண்டனர்.
கண்டன ஆர்ப்பாட்டம்
மணிப்பூரில் நடந்து வரும் வன்முறையை உடனே தடுத்து நிறுத்த வேண்டும், பழங்குடி பெண்கள் மீதான பாலியல் வன்முறைக்கு முடிவு கட்ட வேண்டும், அங்கு சட்டம் ஒழுங்கை நிலைநாட்டாத மணிப்பூர் பா.ஜனதா அரசை பதவி நீக்கம் செய்து மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநில பொருளாளர் எம்.ஆறுமுகம் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை மாவட்ட செயலாளர் சி.சிவசாமி தொடங்கி வைத்து பேசினார். இதில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள்.
இசைக்கருவிகளை இசைத்து கோஷம்
இந்த ஆர்ப்பாட்டத்தில் பழங்குடியின மக்கள் கலந்து கொண்டு தங்களின் பாரம்பரிய இசைக்கருவிகளான மத்தளம், நாதஸ்வரம் உள்பட பல்வேறு இசைக்கருவிகளை இசைத்தபடி மத்திய அரசை கண்டித்து கோஷமிட்டனர்.
முன்னதாக முன்னாள் எம்.எல்.ஏ. எம்.ஆறுமுகம் நிருபர்களிடம் கூறியதாவது:-
மணிப்பூரில் வன்முறை தொடங்கி 3 மாதங்கள் ஆகியும் அமைதி யை நிலைநாட்ட பா.ஜனதா அரசு முயற்சி எடுக்க வில்லை. இயற்கை வளங்களை பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளையடிக் கவும், அரசியல் சுயலாபத்திற்காக மணிப்பூரில் இனக்கலவரத்தை திட்டமிட்டு தூண்டிவிட்டு இருக்கிறது. ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருந்த 2 இனக்குழுக்களுக்கு இடையே, இன, மதவெறியை விதைத்து கொண்டிருக்கிறது.
தொடர்ந்து போராடும்
பாதுகாக்க வேண்டிய காவல்துறை, இனவெறி கும்பலுக்கு ஆயுதங்களை அள்ளி கொடுத்து கொண்டிருக்கிறது. 2 பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக இழுத்து சென்றது 2½ மாதங்க ளுக்கு பிறகு வெளியே வந்துள்ளது. இன்னும் இதுபோன்ற கொடுமையான சம்பவங்கள் ஏராளமானவை நடந்து வருகிறது. மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட கம்யூனிஸ்டு கட்சி தொடர்ந்து போராடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிர்வாகிகள்
ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட துணை செயலாளர்கள் ஜே.ஜேம்ஸ், குணசேகர், மாவட்ட பொருளாளர் சி.தங்கவேல், ஏ.ஐ.டி.யு.சி மாவட்ட செயலாளர் கே.எம்.செல்வராஜ், மாணவர் பெருமன்ற மாநில துணை தலை வர் பா.நி.சினேகா, பழங்குடி மக்கள் சங்க மாநில நிர்வாக குழு உறுப்பினர் ந.மீராபாய், கலை இலக்கிய பெருமன்றம், மாதர் சம்மேளனம், ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம், கலாசார நட்புறவு கழகம், இளைஞர் பெருமன்றம் ஆகியவற்றை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.