இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
ஆறுகளில் படா்ந்துள்ள ஆகாயத்தாமரையை அகற்றக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேதாரண்யம்:
ஆறுகளில் மண்டிகிடக்கும் ஆகாயத்தாமரை செடிகளை அகற்றக்கோரி வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சிவகுருபாண்டியன் தலைமை தாங்கினார். கோரிக்கைகளை வலியுறுத்தி செல்வராஜ் எம்.பி. பேசினார். இதில் மாவட்ட துணை செயலாளர் நாராயணன், மாவட்ட நிர்வாக குழு சம்பந்தம், விவசாய சங்க மாவட்ட செயலாளர் பாபுஜி, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கர், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் மாரியப்பன் மற்றும் ஒன்றிய, நகர, மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். வேதாரண்யம் ஒன்றியத்திற்குட்பட்ட தாணிக்கோட்டகம் முதல் ஆதனூர் வரை உள்ள சுமார் 25 கிலோமீட்டர் தூரம் மானங்கொண்டான் ஆறு, முள்ளியாறுகளில் ஆகாய தாமரை ெசடிகள் படர்ந்து கிடக்கிறது. இதனால் மழை காலத்தில் வயல்களில் தேங்கிய நீரை வடிய வைக்க முடியாமல் போவதால் நெற்பயிர் அனைத்தும் நீரில் மூழ்கி சேதம் அடைகிறது. எனவே ஆகாயத்தாமரையை 100 நாள் வேலை பணியாளர்கள் மூலம் அகற்ற வேண்டும். ஊராட்சிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 100 நாள் வேலையை மீண்டும் தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.