மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 3-வது நாளாக போராட்டம்- 642 பேர் கைது


மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 3-வது நாளாக போராட்டம்- 642 பேர் கைது
x

மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் 3-வது நாளாக இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 642 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு

மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் 3-வது நாளாக இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 642 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடம்பூர்

விலைவாசி உயர்வு, வேலையின்மை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 3 நாட்களாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி நேற்று மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம், மறியல் போராட்டம் நடந்தது.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த மாவட்ட குழு உறுப்பினர் ராமசாமி தலைமையில் கல் கடம்பூர் அருகே உள்ள பாரத ஸ்டேட் வங்கி முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக கட்சியினர் 80 பேரை கைது செய்தனர். பின்னர் வேனில் ஏற்றி அருகே உள்ள தனியார் மாணவர் விடுதிக்கு கொண்டு சென்று தங்க வைத்தனர். அதன்பின்னர் மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

சிவகிரி

இதேபோல் சிவகிரியில் உள்ள தியாகி தீரன் சின்னமலை சிலை அருகே இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் கொடுமுடி ஒன்றிய செயலாளர் ரணதிவேல், மொடக்குறிச்சி ஒன்றிய செயலாளர் மாதேஸ்வரன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

மாவட்ட குழு உறுப்பினர் மு.வரதராஜன், மாவட்ட துணைச் செயலாளர் குணசேகரன், நெசவாளர் கூட்டுறவு சங்க தலைவர் ராமசாமி, முன்னாள் தலைவர் சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அப்போது அங்கிருந்த சிவகிரி போலீசார் மறியலில் ஈடுபட முயன்றதாக 80 பேரை கைது செய்தனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

அந்தியூர்

பர்கூர் மலைப்பகுதி தாமரைக்கரையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் பர்கூர் ஒன்றிய தலைவர் கணேசன் தலைமையில் பஸ் நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார், சாலை மறியலில் ஈடுபட்டதாக 116 பெண்கள், 59 ஆண்கள் என மொத்தம் 175 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் அங்குள்ள சமுதாயக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

தாளவாடி

தாளவாடி ஒன்றிய செயலாளர் மோகன் தலைமையில் தாளவாடி பஸ் நிலையம் அருகே உள்ள தபால் நிலையம் பகுதியில் உள்ள ரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையிலான போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டதாக 140 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் அங்குள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

அதேபோல் ஆசனூர் ஒன்றிய செயலாளர் அருள்சாமி தலைமையில் அரேபாளையத்தில் சாலை மறியலில் ஈடுபட்டதாக 167 பேரை போலீசார் கைது செய்து அங்குள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர். மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 642 பேரை போலீசார் கைது செய்தனர்.


Next Story