இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்


இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்
x

திண்டுக்கல், வேடசந்தூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்

பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் விலை, அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க வேண்டும். தொழிலாளர் நலச்சட்டங்களை திருத்தியதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று சாலை மறியல் நடைபெற்றது. அதன்படி திண்டுக்கல் தலைமை தபால் அலுவலகம் முன்பு சாலை மறியல் நடந்தது. இதற்காக தெய்வசிகாமணிபுரத்தில் உள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தில் இருந்து மாவட்ட செயலாளர் மணிகண்டன் தலைமையில் மாநகர செயலாளர் ராஜாங்கம், மாவட்ட துணை செயலாளர் வினோத்குமார், பொருளாளர் சுதந்திரதேவி உள்ளிட்டோர் ஊர்வலமாக வந்தனர். பின்னர் தபால் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். சி.ஏ.ஜி. அறிக்கையில் ரூ.7½ லட்சம் கோடி ஊழல் நடந்தது தெரியவந்து உள்ளதால் மத்திய அரசு பதவி விலக வேண்டும் என்றும், மத்திய அரசை கண்டித்தும் கோஷமிட்டனர். இந்த சாலை மறியலால் தபால் அலுவலக சாலையில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 60 பெண்கள் உள்பட 126 பேரை போலீசார் கைது செய்தனர். அதேபோல் வேடசந்தூரில், கரூர் சாலையில் ஒன்றிய செயலாளர் முத்துச்சாமி தலைமையில் சாலை மறியல் நடைபெற்றது. இதனால் அந்த பகுதியில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட நிர்வாகிகள் உள்பட 23 பேரை போலீசார் கைது செய்தனர்.


Next Story