இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்


இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்
x
தினத்தந்தி 13 Sept 2023 2:45 AM IST (Updated: 13 Sept 2023 2:45 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் மத்திய அரசை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 300 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோயம்புத்தூர்

கோவை

கோவையில் மத்திய அரசை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 300 பேரை போலீசார் கைது செய்தனர்.

மறியல் போராட்டம்

மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கைகளை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில், மாநிலம் தழுவிய தொடர் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி நேற்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு குவிந்தனர்.

பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில பொருளாளர் எம்.ஆறுமுகம், மாவட்ட செயலாளர் சிவசாமி ஆகியோர் தலைமை தாங்கினர்.

300 பேர் கைது

போராட்டம் காரணமாக ரெயில் நிலைய சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 125 பெண்கள் உள்பட 300 பேரை போலீசார் கைது செய்தனர். போராட்டத்தில் மாவட்ட துணை செயலாளர்கள் ஜே.ஜேம்ஸ், எம்.குணசேகர், மாவட்ட பொருளாளர் சி.தங்கவேல், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சு.பழனிசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கூறியதாவது:- மத்திய அரசின் தவறான கொள்கையால் சமையல் எண்ணெய் விலை மூன்று மடங்காக உயர்ந்து விட்டது. சமையல் கியாஸ் சிலிண்டர் ரூ.410-ல் இருந்து தற்போது ரூ.1,000 ஆக உயர்ந்து உள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல், டீசல் ரூ.100-ஐ தாண்டி விற்பனையாகிறது. பா.ஜனதா அரசு கடைபிடித்து வரும் வெறுப்பு அரசியல் காரணமாக வடகிழக்கு மாநிலங்களில் அமைதியின்மை நிலவுகிறது. எனவே, இதை கண்டித்து தொடர் மறியல் போராட்டம் நடைபெறுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story