இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்
மத்திய அரசை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 28 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோத்தகிரி
மத்திய அரசை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 28 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆர்ப்பாட்டம்
நாட்டில் வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு, மக்களின் ஒற்றுமை சீர்குலைப்பு, பொதுத்துறை நிறுவனங்கள் விற்பனை, இந்தி திணிப்பு உள்ளிட்டவற்றுக்கு காரணமான மத்திய அரசை கண்டித்தும், பா.ஜனதா அரசு பதவி விலக கோரியும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கோத்தகிரி பஸ் நிலையத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தினரும் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் தாலுகா செயலாளர் மொரச்சன் தலைமையில் மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இதில் போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் சங்க மாவட்ட பொருளாளர் இப்ராகிம், ஆஷா பணியாளர்கள் சங்கத்தின் மாநில துணை தலைவர் வசந்தகுமாரி, ஏ.ஐ.டி.யு.சி செயலாளர் பெனடிக்ட், போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் சங்க நிர்வாகி தங்கதுரை மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
சாலை மறியல்
இதையடுத்து பஸ் நிலைய சாலையில் அமர்ந்து திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு பணியை மேற்கொண்டு இருந்த இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தலைைமயிலான போலீசார், சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 18 பெண்கள் உள்பட 28 பேரை கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட அனைவரும் அருகில் இருந்த மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.