இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்


இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்
x
தினத்தந்தி 15 Sept 2023 4:00 AM IST (Updated: 15 Sept 2023 4:00 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசை கண்டித்து ஆண்டிப்பட்டி, போடியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 160 பேரை போலீசார் கைது செய்தனர்.

தேனி

சாலை மறியல்

பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் விலையை குறைக்க வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். வேலையில்லா திண்டாட்டத்தை போக்கி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில், ஆண்டிப்பட்டியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் பிச்சைமணி தலைமை தாங்கினார். நகர செயலாளர் முனீஸ்வரன், மாவட்ட துணை செயலாளர் பரமேஷ்வரன், மாவட்ட குழு உறுப்பினர் மணவாளன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னதாக, ஆண்டிப்பட்டி வைகை அணை சாலை பிரிவில் இருந்து மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டபடி கட்சியினர் ஊர்வலமாக வந்தனர். பின்னர் அங்குள்ள வங்கி முன்பு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.

160 பேர் கைது

இதையடுத்து அங்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 60 பேரை கைது செய்தனர். பின்னர் ஆண்டிப்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்படத்தில் அடைக்கப்பட்ட அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர். இதேபோல், போடியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில், சாலை மறியல் நடத்தப்படும் என்று அறிவித்தனர். இதற்காக தேவர் சிலை பகுதியில் இருந்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஊர்வலமாக காமராஜர் சாலையில் உள்ள வங்கி முன்பு வந்தனர்.

பின்னர் அவர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரவி முருகன் தலைமை தாங்கினார். இதில் ஒன்றிய செயலாளர் மணிகண்டன் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் முருகேசன், கணேசன், வேல்ராஜ், மேலசொக்கநாதபுரம் பேரூராட்சி துணை தலைவர் பஞ்சவர்ணம் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதையடுத்து அங்கு வந்த போடி நகர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 100 பேரை கைது செய்து மாலையில் விடுவித்தனர். இந்த போராட்டத்தால் அந்த சாலையில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story