இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்; 181 பேர் கைது
மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து 181 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் புதுக்கோட்டையில் தலைமை தபால் நிலையம் முன்பு நேற்று சாலை மறியல் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் செங்கோடன் தலைமை தாங்கினார். விலைவாசி உயர்வு, அத்தியாவசிய பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. விதிப்பு, பொருளாதார கொள்கை, வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்டவற்றில் மத்திய அரசை கண்டித்து இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது. முன்னதாக நகர்மன்ற வளாகத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு தலைமை தபால் நிலையம் முன்பு வந்தடைந்தனர். போராட்டத்தின் போது கோரிக்கைகள் தொடர்பாக கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து அருகே உள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர். இதில் 40 பெண்கள் உள்பட 140 பேர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர். இந்த மறியலால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது.
இதேபோல் மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் அறந்தாங்கி தபால் நிலையம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதற்கு ராஜேந்திரன் தலைமை தாங்கினார். அப்போது மறியலில் ஈடுபட்டவர்கள் மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட 41 பேரை போலீசார் கைது செய்தனர்.