சமுதாய காடுகள் உருவாக்கப்படும்


சமுதாய காடுகள் உருவாக்கப்படும்
x

ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் மூலம் சமுதாய காடுகள் உருவாக்கப்படும் என்று அமைச்சர் பொன்முடி பேசினார்.

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் அருகே ஒதியத்தூர் கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட தொடக்க விழா நடைபெற்றது. இதற்கு கலெக்டர் மோகன் தலைமை தாங்கினார். புகழேந்தி எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு மரக்கன்றுகள், இடுபொருட்கள், விசைத்தெளிப்பான் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களிலும் ஒட்டுமொத்த வேளாண் வளர்ச்சியை உருவாக்கி விவசாயிகளின் நலன் சார்ந்த அனைத்து துறைகளின் ஒருங்கிணைப்புடன் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் என்கிற பெரும் திட்டம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் மூலம் தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டுவருதல், நீர்வள ஆதாரங்களை பெருக்குதல், சூரிய பம்பு செட்டுகளை அமைத்தல், வேளாண் விளை பொருட்களை மதிப்புக்கூட்டி சந்தைப்படுத்துதல், நுண்ணீர் பாசன முறைகளை பின்பற்றுதல், சமுதாய காடுகள் உருவாக்குதல், கால்நடைகளின் பால் உற்பத்தியை பெருக்குதல், கூட்டுறவு சங்கங்கள் மூலம் பயிர் கடன் வழங்குதல், வருவாய்த்துறை மூலம் நிலம் பட்டா மாறுதல் வழங்குதல், குளங்களை தூர்வாருதல் உள்ளிட்ட பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு செயல்படுத்தப்படும். எனவே இந்த திட்டத்தை பயன்படுத்தி அனைத்து பகுதிகளிலும் 100 சதவீத வேளாண் பணிகளை மேற்கொண்டு விவசாயிகள் பயன்பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் வேளாண்மை இணை இயக்குனர் ரமணா, ஊரக வளர்ச்சி மாவட்ட திட்ட இயக்குனர் சங்கர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) பெரியசாமி, முகையூர் ஒன்றியக்குழு தலைவர் தனலட்சுமி உமேஸ்வரன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் ஜி.ரவிச்சந்திரன், அ.சா.ஏ.பிரபு, எம்.ஆர்.ராஜீவ்காந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனுவாசன், சாம்ராஜ், அலுவலக மேலாளர் கண்ணதாசன், வேளாண்மைத்துறை உதவி இயக்குனர் கனகலிங்கம், அரசு வக்கீல் கார்த்திகேயன், ஊராட்சி மன்ற தலைவர் அமுதாதேவி வீரன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story