ஏரியூர் அருகே பரிசல் பயணத்திற்கு கூடுதல் கட்டணம் வசூல் - வட்டார வளர்ச்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை


ஏரியூர் அருகே பரிசல் பயணத்திற்கு கூடுதல் கட்டணம் வசூல் - வட்டார வளர்ச்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 3 Jun 2023 12:15 AM IST (Updated: 3 Jun 2023 8:14 AM IST)
t-max-icont-min-icon

ஏரியூர் அருகே பரிசல் பயணத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக எழுந்த புகாரின் பேரில், போலீஸ் நிலையம் மற்றும் வட்டார அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

தர்மபுரி

ஏரியூர்:

கூடுதல் கட்டணம் வசூல்

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே தர்மபுரி-சேலம் மாவட்ட எல்லையை கடந்து செல்ல மேட்டூர் நீர்த்தேக்கத்தை கடக்க வேண்டி உள்ளது. இந்த மேட்டூர் நீர்த்தேக்கத்தை கடந்து செல்வதற்காக, ஒட்டனூர்- கோட்டையூர் இடையே ஒரு பரிசல் துறையும், நாகமரை- பண்ணவாடி இடையே மற்றொரு பரிசல் துறையும் உள்ளது.

இதை பயன்படுத்தி இந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும், விவசாயிகளும், பள்ளி கல்லூரி மாணவ-மாணவிகளும், சேலம் மாவட்ட பகுதிக்கு சென்று வருகின்றனர். மேலும் விவசாய பயிர்களையும், சேலம் மாவட்டத்தில் உள்ள வாரச்சந்தைகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இதற்காக பரிசல் பயண கட்டணம் தனிநபருக்கு 5 ரூபாய் எனவும், மோட்டார் சைக்கிள்களுக்கு 10 ரூபாய் எனவும் இருந்தது.

இது கடந்த 3 ஆண்டுகளில், படிப்படியாக உயர்ந்து தற்போது தனி நபருக்கு 20 ரூபாய் எனவும், மோட்டார் சைக்கிளுக்கு 40 ரூபாய் எனவும் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் முற்றுகை

இந்த கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி, இப்பகுதி பொதுமக்கள் ஏரியூர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தனர். மேலும் ஏரியூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு பொதுமக்கள் சென்று அங்கு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

பின்னர் பொதுமக்கள் வட்டார வளர்ச்சி அலுவலர் மீனாவிடம் கோரிக்கை தொடர்பாக மனு அளித்தனர். அப்போது பொதுமக்கள் வட்டார வளர்ச்சி அலுவலரையும் முற்றுகையிட்டு, கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

உடனடியாக கட்டண குறைப்பு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், விரைவில் சாலை மறியல் செய்யப்போவதாக போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அறிவித்து உள்ளனர்.


Next Story