கிராமங்களுக்கு முறையாக டவுன் பஸ்கள் இயக்காததால் பயணிகள் அவதி
அரசு போக்குவரத்து கழக சீர்காழி கிளையில் டிரைவர்கள் பற்றாக்குறையால் கிராமங்களுக்கு முறையாக டவுன் பஸ்கள் இயக்கப்படாமல் பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர். உடனடியாக காலிப்பணியிடங்களை நிரப்பி அனைத்து பகுதிகளுக்கும் பஸ் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
சீர்காழி:
அரசு போக்குவரத்து கழக சீர்காழி கிளையில் டிரைவர்கள் பற்றாக்குறையால் கிராமங்களுக்கு முறையாக டவுன் பஸ்கள் இயக்கப்படாமல் பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர். உடனடியாக காலிப்பணியிடங்களை நிரப்பி அனைத்து பகுதிகளுக்கும் பஸ் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெருமாள் கோவில்கள்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் புதன் தலம், செவ்வாய் தலம், கேது பகவான் தலம், நந்தனார் வழிபட நந்தி விலகிய சிவலோகநாதன் கோவில், நாங்கூர், அண்ணன் பெருமாள் கோவில், மங்கைமடம், குரவளூர் உள்ளிட்ட பல்வேறு பெருமாள் கோவில்களை கொண்ட பகுதியாக சீர்காழி விளங்கி வருகிறது. மேலும் பழையார் மீன் பிடித்துறைமுகம், திருமுல்லைவாசல் மீன்பிடி துறைமுகம், பூம்புகார் சுற்றுலாத்தலம் ஆகியவை அமைந்துள்ளன.
டவுன் பஸ்கள்
இந்த நிலையில் சீர்காழியில் இருந்து பூம்புகார், கீழமூவர்கரை, திருமுல்லைவாசல், பழையாறு, வடரங்கம், மணல்மேடு, மகேந்திரப்பள்ளி, மாதிரி வேலூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு சீர்காழி அரசு கிளை போக்குவரத்து கழகம் சார்பில் 18-க்கும் மேற்பட்ட டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதேபோல் மயிலாடுதுறை, சிதம்பரம் உள்ளிட்ட புறநகர பகுதிகளுக்கும் 14-க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பஸ்கள் கிராமப்புற மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்து வருகிறது. குறிப்பாக பள்ளி மாணவர்களுக்கு அரசு டவுன் பஸ்கள் தான் உதவியாக இருந்து வருகிறது.
முறையாக இயக்கப்படுவதில்லை
இந்த நிலையில் சீர்காழி அரசு கிளை போக்குவரத்துக்கழகத்தில் கடந்த சில மாதங்களாக 13 டிரைவர்கள் பணி ஓய்வு பெற்றனர். இவர்களுக்கு பதிலாக மீண்டும் டிரைவர்கள் நியமனம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.
டிரைவர்கள் பற்றாக்குறை காரணத்தால் சீர்காழியில் இருந்து பல்வேறு கிராமங்களுக்கு இயக்கப்படும் டவுன் பஸ்கள் காலை, இரவு மற்றும் மதிய வேளையில் முறையாக இயக்கப்படாததால் கிராமப்புறங்களில் உள்ள மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து பயணிகளும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
மாணவர்கள் அவதி
அரசு பஸ் முறையாக இயக்கப்படாததால் கூலித் தொழிலாளர்கள், மாணவர்கள், நோயாளிகள், வர்த்தகர்கள் உள்பட அனைவரும் தொடர்ந்து அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே பொதுமக்களின் நலன் கருதி அரசு உடனடியாக போக்குவரத்து கழகத்தில் உள்ள டிரைவர் காலிப் பணியிடங்களை நிரப்பி முறையாக அனைத்து கிராமங்களுக்கும் பஸ்களை இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்
இதுகுறித்து சீர்காழியை சேர்ந்த நாடி.கே. செல்வமுத்துக்குமரன் கூறுகையில், சீர்காழி அரசு கிளை போக்குவரத்து கழகத்தில் இருந்து பல்வேறு கிராமங்களுக்கு இயக்கப்படும் டவுன் பஸ்கள் கடந்த ஆறு மாதங்களாக போதிய டிரைவர்கள் இல்லாததால் முறையாக கிராமப்புறங்களுக்கு இயக்கப்படாமல் உள்ளது.
மதிய வேளையில் டவுன் பஸ்கள் டிரைவர்கள் இல்லாததால் பஸ் நிலையத்திலும், பணிமனையிலும் நிறுத்தி வைக்கப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள டிரைவர், கண்டக்டர், மெக்கானிக் உள்ளிட்ட காலி பணியிடங்களை நிரப்பி கிராமப்புறங்களுக்கு தினந்தோறும் முறையாக பஸ்களை இயக்க வேண்டும் என்றார்.
மாற்று ஏற்பாடு
இதுகுறித்து சீர்காழி கிளை அரசு போக்குவரத்துகழக அதிகாரி ஒருவர் கூறுகையில், சீர்காழி அரசு கிளை போக்குவரத்து கழகத்தில் 6 டிரைவர்கள் காலியாக உள்ளன. மேலும் 2 பேர் விருப்ப ஓய்வு பெற்று சென்று விட்டனர். இருந்த போதிலும் அனைத்து வழித்தடங்களிலும் மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு பஸ்கள் இயக்கப்படுகின்றன. பணிமனையில் பஸ்களுக்கு தேவையான உதிரி பாகங்கள் உள்ளதாகவும், பழுதடையும் பஸ்கள் உடனுக்குடன் சரி செய்யப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது என்றார்.