அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்


அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
x

ஜோலார்பேட்டை பகுதியில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் தொடங்கி வைத்தார்.

திருப்பத்தூர்

கண்காணிப்பு கேமராக்கள்

திருப்பத்தூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் மாவட்ட காவல் துறை சார்பில் போக்குவரத்து நெரிசல், சாலை விபத்து, குற்ற சம்பவங்களை கண்காணிக்க ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் குரிசிலாப்பட்டு போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய போலீஸ்காரர் ஒருவரின் நினைவு தினத்தையொட்டி அவரது குடும்பத்தினர் சுமார் ரூ.3 லட்சம் மதிப்பிலான அதிநவீன 3 கண்காணிப்பு கேமராக்களை திருப்பத்தூர் மாவட்ட காவல் துறையிடம் வழங்கினர்.

இந்த கேமராக்களை திருப்பத்தூர்- ஜோலார்பேட்டை மெயின் ரோடு, அச்சமங்கலம், ரெயில்வே மேம்பாலம் ஆகிய இடங்களில் பொருத்தி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் தொடங்கி வைத்து பேசினார்.

துல்லியமாக...

அப்போது அவர் பேசுகையில் இந்த கேமராக்கள் மூலம் போக்குவரத்து நெரிசல், சாலை விபத்துகள் மற்றும் குற்ற சம்பவங்களை துல்லியமாக கண்காணிக்க முடியும். மேலும் ஹெல்மெட் அணியாமல் வாகனத்தை ஓட்டி செல்வது, சீட் பெல்ட் அணியாமல் காரை ஓட்டுவது, அதிவேகமாக வாகனத்தில் செல்வது உள்ளிட்ட சாலை விதி மீறல்கள் இரவு நேரங்களில் துல்லியமாக கண்காணிக்கப்படும்.

மேலும் சுமார் 200 அடி தூரத்தில் இருக்கும் வாகனத்தின் நம்பர் பிளேட்டில் உள்ள எண்களை கண்காணித்து பதிவு செய்து வாகனத்தின் வகை, உரிமையாளர்களின் பெயர், முகவரி உள்ளிட்ட அனைத்தையும் இந்த கேமராக்கள் பதிவு செய்து விடும். இந்த கேமராக்களின் செயல்பாட்டை திருப்பத்தூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலக கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்க முடியும் என்றார்.


Next Story