முதியவருக்கு ரூ.34 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்
கோவை வேலாண்டிபாளையத்தை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். இவரது மனைவி யசோதா (வயது 62). இவர் சாய்பாபா காலனியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்து உள்ளார். கடந்த 2017-ம் ஆண்டு மே மாதத்தில் அவரது சேமிப்பு கணக்கில் ரூ.831-ம், பிக்சட் டெபாசிட் கணக்கில் ரூ.1 லட்சத்து 44 ஆயிரமும் இருந்து உள்ளது.
கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை, வாடிக்கையாளர் சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்பை பராமரிக்கவில்லை எனக்கூறி ஒவ்வொரு மாதத்திற்கும் ரூ.50 முதல் 60 வரை அபராதம் விதித்து, சேமிப்பு கணக்கிலிருந்து வங்கி பிடித்தம் செய்து உள்ளது. இவ்வாறு அபராதம் விதித்தது தவறு என வாடிக்கையாளர் வங்கியில் கேட்டபோது கடந்த 2018 ஜனவரி முதல் வாரத்தில் அபராதமாக பிடித்தம் செய்யப்பட்ட தொகையை வங்கி மீண்டும் அவரது கணக்கில் வரவு வைத்து உள்ளது. ஆனால் 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்கு பிடித்தம் செய்த அபராத தொகையை வங்கி திரும்ப வழங்கவில்லை.
இதனால் யசோதா தனது கணவர் மூலமாக கடந்த 2018-ம் ஆண்டு, கோவை மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வங்கி மீது வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு விரைவான விசாரணைக்காக நாமக்கல் நுகர்வோர் கோர்ட்டிற்கு மாற்றம் செய்யப்பட்டது. இவ்வழக்கில் நீதிபதி டாக்டர் ராமராஜ் நேற்று தீர்ப்பு வழங்கினார். அதில், சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்பை பராமரிக்கவில்லை எனக்கூறி வங்கி கணக்கிலிருந்து எடுத்துக் கொண்ட ரூ.34.50 மற்றும் வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ.34,500-ஐ சேர்த்து 4 வாரங்களுக்குள், வங்கி வழக்கு தாக்கல் செய்தவருக்கு வழங்க வேண்டும் என தெரிவித்து இருந்தார்.