ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்


ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்
x

மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

நாகப்பட்டினம்

மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

குறைதீர்க்கும் கூட்டம்

நாகை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா, வேளாண் இணை இயக்குனர் ஜாக்குலா அகண்டராவ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் உறுப்பினர்கள் இடையே நடந்த விவாதம் வருமாறு:-

முஜீபுஷரீக்:-காரப்பிடாகை தெற்குசேத்தி கிராமத்தில் ஊராட்சிக்கு சொந்தமான மீன்பாசி குத்தகை குளத்தை ஏலம் விடுவதை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும்.

கண்காணிக்க குழுக்கள்

சம்பந்தம்:- நாகை மாவட்டத்தில் கொள்முதல் நிலையங்களை கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் உள்ளவர்களில் சிலர் யார் என்றே தெரியவில்லை. எனவே மூத்த விவசாயிகளை கொண்டு குழுக்கள் அமைக்க வேண்டும்.

தமிழ்ச்செல்வன்:-நாகை கொள்முதல் நிலையங்களை கண்காணிக்க அமைக்கப்பட்டுள்ள குழுவில் நெல் வியாபாரிகள், பண்ணையார்களை நியமிக்கப்பட்டுள்ளதால் ஊழலுக்கு வழிவகுக்கும். எனவே ஆய்வு செய்து குழுக்களை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நேர்மையாக செயல்பட்டு வருகிறது

கலெக்டர் அருண்தம்புராஜ்:- மாவட்ட நிர்வாகம் நேர்மையாக செயல்பட்டு வருகிறது. மக்கள் நலனுக்காக மட்டுமே செயல்பட்டு வருகிறோம். தவறுகள் சுட்டிக்காட்டப்பட்டால் அவை சரிசெய்து கொள்ளப்படும். குறைகள் இருந்தால் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு தெரிவித்து நிவர்த்தி பெறலாம்.

மணியன்:- பயிர்க்காப்பீடு செய்வதற்கு நவம்பர் மாதம் வரை காலக்கெடு கொடுக்கப்பட்டுள்ளது. இப்போது சம்பா நெல் சாகுபடி நேரடி விதைப்பு செய்துள்ளோம். கிராம நிர்வாக அலுவலகம் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில் இப்போது முதலே சிட்டா அடங்கல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரூ.35 ஆயிரம் இழப்பீடு

பிரபாகரன்:-மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். மழைநீர் வடிய வழி இல்லாத இடங்களை கண்டறிந்து வடிகால் வசதிகளை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும்.

சுப்பிரமணியன்:- மீனம்பநல்லூர் கிராமத்தில் 40 ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு இடவசதி இன்றி உள்ளது. இதனால் புதிய நெல் கொள்முதல் நிலையம் கட்டிடத்தர வேண்டும்.

கமல்ராம்:-தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு புதிதாக கடன் வழங்க வேண்டும். மழையால் பாதிக்கப்பட்ட குறுவை நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்.

இவ்வாறு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.


Next Story