சூறாவளியால் சேதமடைந்த வாழைகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்


சூறாவளியால் சேதமடைந்த வாழைகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்
x
தினத்தந்தி 25 April 2023 12:15 AM IST (Updated: 25 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சூறாவளியால் சேதமடைந்த வாழைகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்

கோயம்புத்தூர்

கோவை

சூறாவளியால் சேதமடைந்த வாழைகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் மனு அளித்தனர்.

குறைதீர்க்கும் கூட்டம்

கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கிராந்திகுமார் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். கூட்டத்தில் தமிழக விவசாயிகள் சங்கம் மாநில தலைவர் வேணுகோபால் மற்றும் விவசாயிகள்அளித்துள்ள மனுவில், கோவை மாவட்டம் சிறுமுகை, மேட்டுப்பாளையம், அன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் வாழை விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. கடந்த 21-ந் தேதி சூறாவளி காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட வாழைகள் முறிந்து சேதமானது. மேலும் மான், மயில், காட்டுபன்றி, யானை போன்ற வனவிலங்குகள் தொல்லையும் இருக்கிறது. ஒரு வாழைக்கு உற்பத்தி செலவாக ரூ.150 வரை ஆகிறது. டெல்டா மாவட்டங்களில் மழையினால் ஏற்படும் சேதங்களுக்கு இழப்பீடு வழங்கப்படுகிறது. அதே போல் வாழை விவசாயிகளுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருந்தது.

பி.என்.புதூர் பகுதியை சேர்ந்த பூங்கொடி (வயது 46) என்ற பெண் அளித்துள்ள மனுவில், எனக்கு இரு மகன்கள் உள்ளனர். எனது கணவர் நெசவு வேலை செய்து வருகிறார். எனது மகன் அருண் ஆதித்யா குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் ஏஜென்சியில் பணியாற்றி வந்தார். அப்போது கம்பெனி பணத்தை எடுத்து ஆன்லைன் கேம் விளையாடிவிட்டதாக போலீஸ் நிலையத்தில் ஏஜென்சி உரிமையாளர் புகார் அளித்திருந்தார்.

மேலும் ஏஜென்சியினர் வந்து என்னிடம் உள்ள வீட்டு பத்திரத்தை வாங்கி வைத்து கொண்டனர். பின்னர் அவர்கள் கேட்ட ரூ.9 லட்சத்தை நகைகள் அடகு வைத்தும், கடன் வாங்கியும் கொடுத்துவிட்டேன். ஆனால் அவர்கள் எனது வீட்டு பத்திரத்தை திருப்பி தராமல் கூடுதலாக ரூ.4 லட்சம் கேட்கின்றனர். எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இருந்தது.

அடிப்படை வசதிகள்

கோவை எம்.ஜி.ஆர். மார்க்கெட் சுமைதூக்குவோர் நலச்சங்கத்தினர் அளித்த மனுவில், எம்.ஜி.ஆர். மொத்த காய்கறி மார்க்கெட்டில் ஏராளமான சுமை தூக்கும் தொழிலாளர்கள் உள்ளனர். ஆனால் தொழிலாளர்கள் உணவு அருந்தவும், குடிப்பதற்கும் குடிநீர் வசதி இல்லாமல் உள்ளது. மழைநீர் வடிகால் சீரமைக்கப்படாமல் உள்ளதால் சாக்கடை நீர் தேங்கி நோய்பரவும் அபாயம் உள்ளது. எனவே அடிப்படை வசதிகள் செய்து தருவதுடன், தொழிலாளர்கள் உணவு அருந்தவும், உடை மாற்றவும் காலியிடம் ஒதுக்கி தர வேண்டும் என்று இருந்தது.

ஆலந்துறை பேரூராட்சிக்கு உட்பட்ட மூங்கில்மடைபதி பழங்குடியின பெண்கள் அளித்த மனுவில், பழங்குடியின மக்களான எங்களுக்கு அரசு சார்பில் 64 வீடுகள் கட்டப்பட்டன. இதில் 50 வீடுகள் எங்களுக்கும், 12 வீடுகள் பழங்குடியின மக்கள் அல்லாத வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கும் ஒதுக்கப்பட்டு உள்ளது. 2 வீடுகள் யாருக்கும் ஒதுக்கப்படாமல் உள்ளது. பழங்குடியினருக்கு கட்டப்பட்ட வீடுகளை வேறு சமுதாய மக்களுக்கு ஒதுக்கப்பட்டதை ரத்து செய்து, அதனை பழங்குடியின மக்களுக்கே வழங்க வேண்டும் என்று இருந்தது.


Next Story