முந்தி செல்வதில் போட்டி: தனியார் பஸ்கள் மோதல்; 6 பேர் படுகாயம்


முந்தி செல்வதில் போட்டி:  தனியார் பஸ்கள் மோதல்; 6 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 23 Oct 2022 6:45 PM GMT (Updated: 23 Oct 2022 6:46 PM GMT)

எரியோடு அருகே முந்தி செல்வதில் நடத்த போட்டியில் தனியாா் பஸ் மீது மற்றொரு பஸ் மோதியது. இதில் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

திண்டுக்கல்


கரூரில் இருந்து திண்டுக்கல் நோக்கி தனியார் பஸ் ஒன்று நேற்று முன்தினம் இரவு சென்று கொண்டிருந்தது. பஸ்சை ரெட்டியபட்டியை சேர்ந்த செக்கண்ணன் (வயது 46) என்பவர் ஓட்டி சென்றார். இந்த பஸ்சுக்கு பின்னால், கரூரில் இருந்து திண்டுக்கல்லுக்கு மற்றொரு தனியார் பஸ்சும் சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சை எரியோடு அருகே உள்ள குண்டாம்பட்டியை சேர்ந்த ஆறுமுகம் (45) என்பவர் ஓட்டி சென்றார். எரியோடு அருகே மறவபட்டி பிரிவில் வந்தபோது 2 பஸ்களுக்கும் இடையே முந்தி செல்வதில் போட்டி ஏற்பட்டது.


போட்டி போட்டு கொண்டு சென்றபோது முன்னால் சென்ற பஸ் டிரைவர் திடீரென பிரேக் போட்டார். இதனால் பின்னால் வந்த மற்றொரு பஸ் அதன் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பஸ்களில் பயணம் செய்த உள்ளியகோட்டையைச் சேர்ந்த பழனியப்பன் (56), பாலகிருஷ்ணன், காளிதாஸ் (36), அர்ஜூனா (21), எஸ்.புதூரைச் சேர்ந்த பால்ராஜ் (42), மானாமதுரையைச் சேர்ந்த புஷ்பராஜா (32) ஆகிய 6 பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து எரியோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்தியபிரபா, தனியார் பஸ் டிரைவர்களான ஆறுமுகம் செக்கண்ணன் ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.



Next Story