கல்லூரி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை போட்டிகள்
நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நாளை மறுநாள் கல்லூரி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட உள்ளதாக கலெக்டர் ஸ்ரேயாசிங் தெரிவித்து உள்ளார்.
பேச்சுப்போட்டி
நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் மாவட்ட அளவில் கல்லூரி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் நடத்தப்பட உள்ளது. இதில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரி மாணவர்களும் பங்கேற்கலாம்.
ஆனால் ஒவ்வொரு கல்லூரியில் இருந்தும் கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிக்கு தலா ஒருவர் வீதம் 3 பேர் மட்டுமே பங்கேற்க முடியும். மேலும் போட்டிகளில் பங்கேற்க உள்ள மாணவர்களை அந்தந்த கல்லூரியின் முதல்வரே தேர்வு செய்து அனுப்ப வேண்டும்.
ரூ.10 ஆயிரம் பரிசு
இந்த போட்டிகளில் வெற்றி பெறும் கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். அதேபோல், 2-ம் பரிசாக ரூ.7 ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ.5 ஆயிரமும் வழங்கப்பட உள்ளது. எனவே இந்த போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள், தங்கள் கல்லூரியின் முதல்வரிடம் உரிய படிவத்தை பெற்று பூர்த்தி செய்து தமிழ் வளர்ச்சித் துறையின் உதவி இயக்குனரிடம் போட்டிகள் தொடங்குவதற்கு முன்பாக வழங்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தின் கூடுதல் கட்டிடத்தில் உள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தை 04286 292164 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.