குறைதீர்க்கும் கூட்டத்தில் சரமாரி புகார்


குறைதீர்க்கும் கூட்டத்தில் சரமாரி புகார்
x

கமுதி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் மான்கள், காட்டுப்பன்றிகளால் பயிர்கள் பாதிக்கப்படுகிறது என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் அதிகாரிகளை முற்றுகையிட்டு விவசாயிகள் புகார் கூறினர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம்,

கமுதி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் மான்கள், காட்டுப்பன்றிகளால் பயிர்கள் பாதிக்கப்படுகிறது என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் அதிகாரிகளை முற்றுகையிட்டு விவசாயிகள் புகார் கூறினர்.

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அதிகாரி காமாட்சி கணேசன் தலைமையில் நடைபெற்றது. ராமநாதபுரம் வனஉயிரின காப்பாளர் பகான் ஜகதீஷ் சுதாகர், விவசாய இணை இயக்குனர் டாம்.பி. சைலஸ், துணை இயக்குனர் சேக்அப்துல்லா, கூட்டுறவு இணை பதிவாளர் ராஜேந்திர பிரசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள் கூறிய தாவது:- எம்.புதுக்குளம் ஊராட்சியில் ரேஷன்கடையில் கால் லிட்டர் தான் மண்எண்ணெய் ஊற்றுகின்றனர். மாவட்டத்தில் கமுதி உள்ளிட்ட பகுதிகளில் காட்டு மான்கள், காட்டு பன்றிகள் தொல்லை அதிகரித்து விட்டது. இந்த விலங்கு களால் பயிர்கள் சேதமடைகின்றன.

நடவடிக்கை

இதுகுறித்து நிவாரணம் கோரி இதுவரை கடந்த 6 மாதத்தில் 150 மனுக்கள் புகைப்பட ஆதாரத்துடன் அளித்தும் வனத் துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காட்டு விலங்குகள் இல்லை என்று மறுத்து வருகின்றனர். இனியும் வழங்கவில்லை என்றால் நஷ்டத்தை ஈடுசெய்ய முடியாமல் தற்கொலை செய்வதை தவிர வேறு வழியில்லை. மழைக்காலத்திற்குமுன் கண்மாய்களில் மணல் அள்ளிக் கொள்ள அனுமதி அளிக்கப்படும் என்று அறிவித்து 2 மாதமாகியும் எந்த பயனும் இல்லை.

விண்ணப்பம் வாங்கியதோடு உள்ளது. கடந்த 2020-21-ம் ஆண்டுகளில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது. மத்திய குழு வந்து பார்த்து ஒத்துக்கொண்டனர். மாநில அரசு ரூ.8 ஆயிரம் இழப்பீடு வழங்கியது. ஆனால், மத்திய அரசு இழப்பீடு இதுவரை வழங்கப்படவில்லை. விவசாயத்திற்கு தேவையான மின்சாரம் முறையாக வழங்குவதில்லை.

100 நாள் வேலை

மின்அழுத்த குறைபாட்டால் மோட்டார் இயங்குவதில்லை. சிறிதுநேரம் வழங்கினாலும் முழுமையான மின்சாரம் வழங்குங்கள் அல்லது குறைந்த மின்அழுத்தத்தில் இயங்கும் மோட்டார் வழங்குங்கள்.

100 நாள் வேலை திட்டத்தில் கண்மாய்கள், கால்வாய்களில் வளர்ந்துள்ள காட்டுகருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் பேசினர். கூட்டத்தில் விவசாயிகள் அதிகாரிகளை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது வனஉயிரின காப்பாளர் பகான் ஜகதீஷ் சுதாகர் பாதிப்பு குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அந்த பகுதிகளில் ஆய்வு செய்து அதுபோன்ற விலங்குகள் இருந்தால் வேறு இடத்திற்கு அப்புறப்படுத்தப்படும் என்றார்.

தீர்மானம்

மேலும், 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை கருவேல மரங்களை வெட்டுவதற்கு பயன்படுத்த ஊராட்சிகளில் தீர்மானம் போட்டுதான் மேற்கொள்ள வேண்டும். அதனை ஊராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகம் சொல்ல முடியாது என்று கூறியதால் விவசாயிகள் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அதிகாரிகள் சமாதானம் செய்து அமர வைத்தனர்.


Next Story