வயிற்றில் குழந்தை இறந்துவிட்டதை மறைத்து கர்ப்பிணிக்கு சிகிச்சையா?
வயிற்றில் குழந்தை இறந்துவிட்ட நிலையில் அதை மறைத்து கர்ப்பிணிக்கு சிகிச்சை அளித்த தனியார் ஆஸ்பத்திரி மீது நடவடிக்கைக்கோரி அந்த பெண்ணின் தந்தை கலெக்டரிடம் புகார் அளித்தார்.
ராமநாதபுரம்,
வயிற்றில் குழந்தை இறந்துவிட்ட நிலையில் அதை மறைத்து கர்ப்பிணிக்கு சிகிச்சை அளித்த தனியார் ஆஸ்பத்திரி மீது நடவடிக்கைக்கோரி அந்த பெண்ணின் தந்தை கலெக்டரிடம் புகார் அளித்தார்.
கர்ப்பிணி
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள பகைவென்றி கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். இவர் நேற்று ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் வந்து புகார் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- எனது மகள் கீர்த்திகாவிற்கு கார்த்திக் என்பவரை திருமணம் செய்து கொடுத்து பரமக்குடியில் வசித்துவந்தார். கர்ப்பமான நிலையில் பரமக்குடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.
கடந்த 8 மாதமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் குழந்தை நன்றாக வளர்ச்சியுடன் உள்ளதாக தெரிவித்து சிகிச்சை அளித்தனர். இந்தநிலையில் திடீரென்று எனது மகளுக்கு கை கால் வீங்கியது. உடனே அழைத்து சென்றபோது பரிசோதித்துவிட்டு ரத்த அழுத்தம் உயர்ந்து உள்ளதாக கூறி சிகிச்சை அளித்தனர். ஸ்கேன் பார்த்துவிட்டு நன்றாக உள்ளதாக கூறி சிகிச்சையை தொடர்ந்தனர்.
ரத்த அழுத்தம்
இரவில் திடீரென்று, மதுரை சென்று தனியார் ஆஸ்பத்திரியில் மற்றொரு ஸ்கேன் எடுத்துவிட்டு வாருங்கள் என்றனர். நான் எனது காரில் அழைத்து செல்ல முயன்ற போது ஆம்புலன்சில் அழைத்து செல்லுமாறும் ரத்த அழுத்தம் அதிகமாகி உடல்நிலை மோசமாக உள்ளதாக தெரிவித்தனர்.
அவர்கள் சொன்னபடி மதுரைக்கு சென்றபோது அங்கு இருந்த டாக்டர்கள், ஏற்கனவே எடுத்த ஸ்கேன் அறிக்கையை பார்த்துவிட்டு குழந்தை இறந்துவிட்டது என குறிப்பிடப்பட்டு உள்ளதே என்று கூறி, எனது மகளை பரிசோதித்துவிட்டு தாயை காப்பாற்ற வேண்டும் என்றால் அறுவை சிகிச்சை செய்து, குழந்தையை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
நடவடிக்கை
பெரும் போராட்டத்திற்கு பின்னர் இறந்த குழந்தையை எடுத்து எனது மகளை காப்பாற்றி உள்ளோம். ஸ்கேன் செய்தபின்னர் குழந்தை நன்றாக உள்ளது என ஒரு நாள் முழுவதும் சிகிச்சை அளித்து விட்டு, மறுநாள் மதுரைக்கு அனுப்பிய பரமக்குடி தனியார் ஆஸ்பத்திரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.
இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதி அளித்தார்.
வயிற்றில் இருந்த குழந்தை இறந்த நிலையில், அதை மறைத்து கர்ப்பிணிக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்ததாக தனியார் ஆஸ்பத்திரி மீது கூறப்படும் புகார் பரபரப்பை ஏற்படுத்தியது.