ஊழலின் ஊற்றுக்கண்ணாக இருக்கும் பிறப்பு-இறப்பு சான்றிதழ்கள்


ஊழலின் ஊற்றுக்கண்ணாக இருக்கும் பிறப்பு-இறப்பு சான்றிதழ்கள்
x

பிறப்பு-இறப்பு சான்றிதழ்கள் பெறுவதற்கு மக்கள் அலையாய் அலைய வேண்டி உள்ளது. ஊழலின் ஊற்றுக்கண்ணாக இருக்கும் இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஆன்லைன் முறையிலும் லஞ்சம் கொடுத்து வாங்க வேண்டிய நிலை உள்ளது.

மதுரை


பிறப்பு-இறப்பு சான்றிதழ்கள் பெறுவதற்கு மக்கள் அலையாய் அலைய வேண்டி உள்ளது. ஊழலின் ஊற்றுக்கண்ணாக இருக்கும் இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஆன்லைன் முறையிலும் லஞ்சம் கொடுத்து வாங்க வேண்டிய நிலை உள்ளது.

டிஜிட்டல் சேவை

லஞ்சம் தவிர்ப்போம், நெஞ்சம் நிமிர்வோம் என்று அரசு துறை அலுவலகங்களிலும் எழுதபட்டு இருக்கிறது. ஆனால் அனைத்து அரசு அலுவலகங்களிலும் லஞ்சம் கொடுத்தால் தான் காரியம் நடக்கிறது என்பது எழுதப்படாத விதியாக இருக்கிறது. ஒரு மனிதன் பிறந்தவுடன், அவனுக்கான பிறப்பு சான்றிதழ் பெறுவதில் தொடங்கும் லஞ்சம், அவன் இறந்த பின்பு பெறப்படும் இறப்பு சான்றிதழ் வரை தொடர்கிறது.

அரசு அலுவலகங்களில் லஞ்சத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்பதற்காக பெரும்பாலான சேவைகளை அரசு டிஜிட்டல் முறையில் கொண்டு வந்து இருக்கிறது. ஆனால் இது குறித்து மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததும், லஞ்சம் வாங்கியே ஆக வேண்டும் என்ற அரசு ஊழியர்களின் எண்ணமும் லஞ்சத்தை இன்னும் உயிர்ப்போடு வைத்து இருக்கிறது.

கடந்த காலங்களில் அரசு அலுவலகங்களுக்கு நேரில் சென்று பெற்று வந்த பல சேவைகளை, வீட்டில் இருந்தே டிஜிட்டல் மூலம் தற்போது பெற முடியும். உதாரணமாக அதற்கு பிறப்பு-இறப்பு சான்றிதழ்களை கூறலாம்.

முன்பெல்லாம் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் நிகழும் பிறப்பு மற்றும் இறப்புகளை அந்த ஆஸ்பத்திரியில் இருந்து எழுதி உள்ளாட்சி துறைக்கு அனுப்புவார்கள். அதனை உள்ளாட்சி துறையினர் பதிவு செய்வதற்கு குறைந்தது ஒரு மாதம் ஆகும். அதன்பின் பொதுமக்கள் உள்ளாட்சி துறை அலுவலகத்திற்கு அலையாய், அலைந்து தான் பிறப்பு-இறப்பு சான்றிதழ்களை பெற முடியும். இந்த சான்றிதழ்கள் பெறுவதற்கு பல மாதங்கள் ஆகி விடும்.

இணையதளம்

இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு டிஜிட்டல் முறையில் பிறப்பு-இறப்பு சான்றிதழ்கள் பெறும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. தற்போது ஆஸ்பத்திரிகளில் நிகழும் பிறப்பு-இறப்புகளை உடனடியாக ஆஸ்பத்திரி மூலமாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அதனை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பு அலுவலர், ஆய்வு செய்து ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர் ஒப்புதல் தந்தவுடன் பொதுமக்கள் www.crstn.org என்ற இணையதளத்தில் இருந்து பிறப்பு-இறப்பு சான்றிதழ்களை எளிதாக பதிவிறக்கம் செய்யலாம்.

இதன்மூலம் பொதுமக்கள் எந்த அரசு அலுவலகத்திற்கும் செல்லாமல் வீட்டில் இருந்தப்படியே சான்றிதழ்களை பெற முடியும். ஆனால் பொதுமக்களுக்கு இந்த இணையதளம் குறித்து தெரியாததால், தற்போதும் உள்ளாட்சி அலுவலகங்களுக்கு அலையாய், அலைந்து கொண்டு இருக்கின்றனர்.

ஆன்லைன் பதிவு

உதாரணமாக மதுரை மாநகரில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் இறந்தவரின் பெயர் மற்றும் தகவல்களை ஆதார் அடிப் படையில் ஆன்லைனில் பதிவு செய்து விடுகிறார்கள். அதில் ஏதும் சந்தேகம் இருந்தால் மட்டுமே மாநகராட்சி சுகாதாரத்துறை அலுவலர்கள் சம்பந்தப்பட்ட நபரை தொடர்பு கொண்டு விவரம் கேட்கலாம். ஆனால் தற்போது மதுரை மாநகராட்சி அலுவலர்கள், இறந்தவரின் குடும்பத்தினரை செல்போனில் தொடர்பு கொண்டு உங்களது ஆவணங்களை எல்லாம் கொண்டு வாருங்கள், அதனை சரி பார்க்க வேண்டி இருக்கிறது என்று அழைக்கின்றனர். அதாவது மக்களை கட்டாயப்படுத்தி வரவழைத்து லஞ்சம் பெறுகின்றனர். இதே போன்று தான் பிறப்பு சான்றிதழுக்கும் மக்களை அழைத்து ரூ.1000 வரை லஞ்சம் பெறுகின்றனர்.

ஊழல்

இந்த பிறப்பு-இறப்பு சான்றிதழ்களை பெறுவதில் உள்ள சிக்கல்களை களைய அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆஸ்பத்திரியில் இருந்து பிறப்பு-இறப்பு குறித்த தகவல்களை பெற்றவுடன் அதற்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும். மக்களை எந்த காரணம் கொண்டும் அலுவலகத்திற்கு அழைக்கக்கூடாது. பணம் கொடுத்தால்தான் பிறப்பு-இறப்பு சான்றிதழ்கள் என்ற நிலையை மாற்ற வேண்டும். ஊழலின் ஊற்றுக்கண்ணாக இருக்கும் பிறப்பு-இறப்பு சான்றிதழ்களை இனி லஞ்சம் இல்லாமல் பெறுவதற்கான நடைமுறையை உருவாக்க வேண்டும் என்று பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Next Story