கிருஷ்ணகிரி கலெக்டரிடம் கர்ப்பிணி பரபரப்பு புகார்`திருட்டு வழக்கில் தொடர்பு இருப்பதாக 7 பேரை போலீஸ் இழுத்து சென்றது'


கிருஷ்ணகிரி கலெக்டரிடம் கர்ப்பிணி பரபரப்பு புகார்`திருட்டு வழக்கில் தொடர்பு இருப்பதாக 7 பேரை போலீஸ் இழுத்து சென்றது
x
தினத்தந்தி 14 Jun 2023 1:00 AM IST (Updated: 14 Jun 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி:

திருட்டு வழக்கில் தொடர்பு இருப்பதாக கூறி பெண்கள் உள்பட 7 பேரை போலீசார் இழுத்து சென்றதாக கர்ப்பிணி கிருஷ்ணகிரி கலெக்டரிடம் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

புகார்

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா ஒட்டப்பட்டி அருகே உள்ள புளியாண்டப்பட்டி கூட்டு ரோடு பகுதியை சேர்ந்த கர்ப்பிணியான ராதா என்பவர் நேற்று மாலை தனது குடும்பத்தினருடன் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்து கலெக்டர் சரயுவிடம் ஒரு மனு கொடுத்தார். அதில் தான் பிரசவத்திற்காக எனது தாய் வீட்டிற்கு வந்தேன். கடந்த 11-ந் தேதி இரவு 2 ஜீப்களில் 6 போலீசார் சீருடையில் வந்தனர். அவர்கள் எனது தந்தை அய்யப்பன், பாட்டி கண்ணம்மாள், தாய் அருணா ஆகிய 3 பேரையும் அடித்து இழுத்து சென்றனர். மேலும் தூங்கி கொண்டிருந்த எனது தம்பி ஸ்ரீதர் அழுதவாறு செல்ல அவனையும் ஜீப்பில் ஏற்றினார்கள். இதுகுறித்து கேட்டபோது எங்களை ஆபாசமாக திட்டி அங்கிருந்து சென்றனர். இதுதொடர்பாக எனது உறவினர் சத்யா என்பவர் ஆன்லைன் மூலம் புகார் அளித்திருந்தார். இந்த நிலையில் 12-ந் தேதி அங்கு வந்த 15 போலீசார் புகார் அளித்த சத்யாவையும், அவரது கணவர் ரமேஷ், மருமகள் பூமதி ஆகியோரை அடித்து உதைத்து இழுத்து சென்றனர்.

மீட்டு தர வேண்டும்

திருட்டு வழக்கில் சேர்ப்பதற்காக கண்ணம்மாள், அருணா, சத்யா, பூமதி ஆகிய 4 பெண்களையும், அய்யப்பன், ரமேஷ் என்ற 2 ஆண்களையும் ஸ்ரீதர் என்ற சிறுவனையும் அழைத்து சென்றுள்ளனர். ஆபாசமாக பேசி சட்ட விரோதமாக அழைத்து சென்ற போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது உறவினர்களை மீட்டு தர வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது. இதே போல தமிழ் பழங்குடி குறவன் சங்கம் சார்பில் மாநில பொதுச்செயலாளர் ரவி மற்றும் நிர்வாகிகள் ஒரு புகார் மனு கொடுத்துள்ளனர். அதில் பெண்கள், சிறுவன் உள்பட 7 பேரை இரவு நேரத்தில் வந்து தாக்கி அழைத்து சென்ற போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவர்களை விடுவிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.


Next Story