கர்ப்பிணிக்கு காலாவதியான மாத்திரைகள் வினியோகித்ததாக புகார்
கர்ப்பிணிக்கு காலாவதியான மாத்திரைகள் வினியோகித்ததாக புகார்
கோவை
மயிலேறிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், கர்ப்பிணி பெண்ணுக்கு காலாவதியான சத்து மாத்திரைகள் வினியோகம் செய்யப்பட்டுள்ளதாக புகார் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
காலாவதியான மாத்திரைகள்
கோவை அருகே உள்ள மயிலேறிபாளையம் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இந்த சுகாதார நிலையத்துக்கு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக வருகை தருகிறார்கள். இந்தநிலையில் மயிலேறிபாளையம் கிராமத்தை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன் மாதாந்திர சிகிச்சைக்காக ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வந்துள்ளார். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து விட்டு,சத்துமாத்திரைகள் எழுதி கொடுத்துள்ளனர்.
அதனை பெற்றுக் கொண்டு, அங்குள்ள மாத்திரை வழங்கும் பிரிவில் மாத்திரை வாங்கியுள்ளார். வீட்டுக்கு வந்து பார்த்தபோது அது காலாவதியான மாத்திரை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த பெண் புகார் செய்தார். மேலும் இதுதொடர்பாக சமூகவலைத்தளங்களிலும் வைரலாக பரவியது. இந்த புகாரை தொடர்ந்து கர்ப்பிணி பெண்ணுக்கு வழங்கப்பட்ட மாத்திரைகள் திரும்ப பெறப்பட்டுள்ளது.
விசாரணைக்கு உத்தரவு
இதுகுறித்து மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் அருணா கூறும்போது, காலாவதியான மாத்திரைகள் தொடர்பான தகவல் வந்துள்ளது. இதுதொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. காலாவதியான மாத்திரைகளாக இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.