அரசுப்பள்ளி ஆசிரியைகள் மீதான புகாரை 2 மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும்-மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


அரசுப்பள்ளி ஆசிரியைகள் மீதான புகாரை  2 மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும்-மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x

மாணவரிடம் சாதி வன்மத்தை தூண்டும் வகையில் பேசிய ஆசிரியைகள் மீது கிரிமினல் நடவடிக்கை கோரிய புகாரை 2 மாதத்தில் விசாரித்து நடவடிக்கை எடுக்க போலீஸ் அதிகாரிகளுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை

மாணவரிடம் சாதி வன்மத்தை தூண்டும் வகையில் பேசிய ஆசிரியைகள் மீது கிரிமினல் நடவடிக்கை கோரிய புகாரை 2 மாதத்தில் விசாரித்து நடவடிக்கை எடுக்க போலீஸ் அதிகாரிகளுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

ஆசிரியைகள் பேசிய ஆடியோ

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையைச் சேர்ந்த காந்திமதிநாதன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

நான் தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு துறையின் ஆலோசனை குழு உறுப்பினராக உள்ளேன்.

முகநூல் மற்றும் வாட்ஸ்-அப்களில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஆசிரியருக்கு எதிராக ஒரு மாணவரை பள்ளி ஆசிரியைகள் தூண்டிவிட்டு பேசுவது போன்ற ஆடியோ வெளியானது.

வாட்ஸ்-அப்பில் வெளிவந்த ஆடியோவில் பேசியவர்கள் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தாலுகா குளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த ஆசிரியைகள் என்பது தெரியவந்தது. மாணவர்கள் மத்தியில் சாதி வன்மத்தை தூண்டிவிடும் ஆசிரியைகள் மீது தீண்டாமை மற்றும் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின்கீழ் உரிய நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

பணியிடை நீக்கம்

இந்த வழக்கு நீதிபதி சிவஞானம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட 2 ஆசிரியைகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். குற்றவியல் விசாரணை நடந்து வருகிறது, என தெரிவித்தார்.

இதற்கிடையே மனுதாரர் சார்பில் வக்கீல் பினேகாஸ் ஆஜராகி, மாணவர்களை நல்வழிப்படுத்தும் ஆசிரியைகளே இதுபோன்று சாதி வன்மத்தை மாணவர்கள் மத்தியில் விதைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. சட்டப்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும், என்று வாதாடினார்.

2 மாதத்தில் முடிக்க உத்தரவு

விசாரணை முடிவில், மனுதாரர் புகார் குறித்து தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, விளாத்திகுளம் துணை சூப்பிரண்டு ஆகியோர் மேற்பார்வையில் குளத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் 2 மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.


Related Tags :
Next Story