வடமதுரை அருகே பள்ளி மாணவனை தாக்கியதாக ஆசிரியை மீது புகார்


வடமதுரை அருகே பள்ளி மாணவனை தாக்கியதாக ஆசிரியை மீது புகார்
x
தினத்தந்தி 11 Aug 2023 8:45 PM GMT (Updated: 11 Aug 2023 8:45 PM GMT)

வடமதுரை அருகே பள்ளி மாணவனை தாக்கியதாக ஆசிரியை மீது புகார் அளிக்கப்பட்டது.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள வாளிசெட்டிபட்டியை சேர்ந்த மாயவன் மகன் கவுதம் (வயது 11). இவன், பக்கத்து கிராமமான பிலாத்துவில் உள்ள ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறான். இந்தநிலையில் நேற்று முன்தினம் கவுதம் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வீட்டுப்பாடம் எழுதாமல் பள்ளிக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் பள்ளி ஆசிரியை ஒருவர், ஏன் வீட்டுப்பாடம் எழுதிவிட்டு வரவில்லை என்று கேட்டு கவுதமை பிரம்பால் அடித்து, நகத்தால் கிள்ளியதாக கூறப்படுகிறது. ஆசிரியை அடித்ததில் மாணவனின் உடலில் காயங்கள் ஏற்பட்டது.

இதற்கிடையே பள்ளி முடிந்து மாலை வீட்டுக்கு சென்ற மாணவனுக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவனிடம் பெற்றோர் என்னவென்று கேட்டனர். அப்போது, தன்னை ஆசிரியை அடித்து, கிள்ளி வைத்தது குறித்து அவன் கூறினான். இதையடுத்து மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேற்று வடமதுரை போலீஸ் நிலையத்துக்கு சென்றனர். அப்போது அங்கு, கவுதமை தாக்கிய ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story