புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
ஊருணி தூர்வாரப்படுமா?
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி யூனியன் வண்ணாங்குண்டு பஞ்சாயத்திற்கு உட்பட்ட பண்ணக்கறை கிராமத்தில் பொது ஊருணி உள்ளது. இந்த ஊருணி நீரே இப்பகுதியினருக்கு அத்தியாவசிய நீர் ஆதாரமாக விளங்குகிறது. இந்த ஊருணி தூர்வாரப்படாமல் காணப்படுகிறது. இதனால் ஊருணியில் தண்ணீரை சேமிக்க முடியாமல் நீர் ஆதாரங்கள் பாதிப்படையும் நிலை உள்ளது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வருவார்களா?
சீனி ஜலாலுதீன், பண்ணக்கரை.
தெருவிளக்கு வேண்டும்
ராமநாதபுரம் மாவட்டம் வண்ணாங்குன்டு ஊராட்சி உட்பட்ட கிருஷ்ணாபுரம் பகுதியில் பெரியபட்டினம் செல்லும் பிரதான சாலையிலிருந்து கிருஷ்ணாபுரம் அரசு பள்ளிக்கூடம் வரை தெருவிளக்கு அமைக்க வேண்டும். சாலை இருள் சூழ்ந்து காணப்படுவதால் மாணவர்கள், பொதுமக்கள் சாலையில் செல்ல அச்சப்படும் நிலை உள்ளது. எனவே இப்பகுதியில் தெருவிளக்கு அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிவராஜ், கிருஷ்ணாபுரம்.
போக்குவரத்து நெரிசல்
ராமநாதபுரம் அம்மா பூங்கா 'டி' பிளாக் அருகே தற்காலிகமாக வாரச்சந்தைக்கு இடம் ஒதுக்கப்பட்ட நிலையில் சாலையின் இருபுறமும் சில கடைகள் விரித்து வியாபாரம் செய்யப்படுகிறது. இதனால் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், நடமாடவும் சிரமம் அடையும் நிலை உள்ளது. இதற்கு தீர்வுகாண அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
அஸ்மாபாக் அன்வர்தீன், ராமநாதபுரம்.
குடிநீர் வசதி
ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் குடிநீர் தட்டுப்பாடு தொடர்கிறது. வார்டுகளில் குடிக்க தண்ணீர் இல்லாமல் நோயாளிகள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர். எனவே ஆஸ்பத்திரியில் குடிநீர் வசதி ஏற்படுத்திதர மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், ராமநாதபுரம்.
சாலையில் பள்ளம்
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் குட்லு நகரில் புதிதாக போடப்பட்ட சாலையில் பள்ளம் உள்ளது. அது குறுகலான சாலை என்பதால் வாகனஓட்டிகள் பயணிக்க முடியாத நிலை ஏற்படுவதுடன், சில நேரங்களில் கீழே விழுந்து காயமடை வாய்ப்பு உள்ளது. எனவே சாலையை சீரமைக்க பேருராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
அப்துல்நாசர், அப்துல்நாசர்.