'தினத்தந்தி' புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 17 Sep 2023 9:00 PM GMT (Updated: 17 Sep 2023 9:00 PM GMT)

‘தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திண்டுக்கல்

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தூசி பறப்பதால் வாகன ஓட்டிகள் அவதி

ஒட்டன்சத்திரம் தாலுகா இடையக்கோட்டை அருகே மார்க்கம்பட்டியில் செயல்படும் தனியார் கிரசர் தொழிற்சாலையில் இருந்து டிப்பர் லாரிகள் மூலம் ஜல்லிகற்கள் ஏற்றிச்செல்லப்படுகிறது. இந்த லாரிகள் செல்லும் போது ஜல்லிகற்கள் லாரிகளில் இருந்து சிதறி கீழே விழுவதுடன் தூசியும் பறக்கிறது. இதனால் பின்னால் வரும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். இதனை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பாலன், இடையக்கோட்டை.

பள்ளத்தில் தேங்கும் கழிவுநீர்

வத்தலக்குண்டுவில் நெடுஞ்சாலையோரத்தில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசுப்புழுக்களும் அதிகம் உற்பத்தியாகிறது. எனவே தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜா, வத்தலக்குண்டு.

சேதமடைந்த சாலை

திண்டுக்கல்லை அடுத்த சித்தையன்கோட்டையில் இருந்து நரசிங்கபுரம் செல்லும் சாலை சேதமடைந்த நிலையில் உள்ளது. சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். விபத்துகளும் அடிக்கடி நடக்கிறது. எனவே சாலையை சீரமைக்க வேண்டும்.

-ஜெரால்டு, வக்கம்பட்டி.

எரியாத தெருவிளக்குகள்

பெரியகுளம் தாலுகா கெங்குவார்பட்டி ஜி.கல்லுப்பட்டி வடக்கு தெருவில் உள்ள தெருவிளக்குகள் பழுதடைந்து எரியாமல் உள்ளன. இதனால் அந்த பகுதி முழுவதும் இரவு நேரத்தில் இருள்சூழ்ந்து காணப்படுவதால் பெண்கள் வெளியே செல்ல அச்சப்படுகின்றனர். எனவே பழுதடைந்த தெருவிளக்குகளை விரைவாக சீரமைக்க வேண்டும்.

-கணேசன், ஜி.கல்லுப்பட்டி.

சுருங்கி வரும் சாலை

தோட்டனூத்து திருவள்ளுவர்நகரில் குடியிருப்பு பகுதியில் தற்போது சாலை அமைக்கும் பணிகள் நடக்கிறது. ஆனால் ஏற்கனவே அப்பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் சாலை அமைக்கும் பணி நடக்கிறது. இதனால் சாலை தற்போது சுருங்கி வருகிறது. எனவே ஆக்கிரமிப்பை அகற்றிவிட்டு சாலை பணியை மேற்கொள்ள வேண்டும்.

-சுபாஷ்ராஜ், தோட்டனூத்து.

சாலையின் நடுவே மின்கம்பம்

நிலக்கோட்டை தாலுகா பச்சமலையான்கோட்டை பாண்டியன் நகரில் சாலையின் நடுவே மின்கம்பம் உள்ளது. அதனை வேறு இடத்துக்கு மாற்றாமலேயே சிமெண்டு சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே மின்கம்பத்தை வேறு இடத்துக்கு மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-வெற்றிவேலன், பச்சமலையான்கோட்டை.

சுகாதாரமற்ற பயணிகள் நிழற்குடை

போடி மேலச்சொக்கநாதபுரம் அருகே பி.ரெங்கநாதபுரத்தில் உள்ள பயணிகள் நிழற்குடை சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. இதனால் அதனை பயணிகள் பயன்படுத்த முடியாமல் கொளுத்தும் வெயிலில் பஸ்சுக்காக காத்திருக்கின்றனர். எனவே நிழற்குடையை தூய்மைப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கோபிநாத், பி.ரெங்கநாதபுரம்.

பஸ்கள் வராததால் பயணிகள் அவதி

தேவதானப்பட்டி ஊருக்குள் இரவு 8 மணிக்கு மேல் வெளியூர் பஸ்கள் வருவதில்லை. இதனால் தேவதானப்பட்டியில் இருந்து வெளியூர் செல்வதற்காக வரும் பயணிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். கூடுதல் கட்டணம் செலுத்தி வாடகை வாகனங்களில் வெளியூருக்கு செல்லும் நிலை உள்ளது. எனவே இரவில் வெளியூர் செல்லும் அரசு பஸ்கள் தேவதானப்பட்டி வழியாக செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மாறன், தேவதானப்பட்டி.

ஆக்கிரமிப்பின் பிடியில் ஓடை

கம்பம் மேற்கு பகுதியில் உள்ள மங்கட்டான் ஊத்து ஓடை தற்போது ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ளது. இதனால் ஓடைக்கு தண்ணீர் வரும் வழித்தடங்கள் அடைபட்டுவிட்டன. இதன் காரணமாக ஓடைக்கு தண்ணீர் வருவதில்லை. இதனால் தண்ணீர் இன்றி ஓடை வறண்டு வருவதுடன் நிலத்தடி நீர்மட்டமும அதல பாதாளத்துக்கு சென்றுவிட்டது. எனவே ஓடை ஆக்கிரமிப்பை விரைவாக அகற்ற வேண்டும்.

-கண்ணன், கம்பம்.

-----------------

உங்கள் புகார்களை இணையதளம் மூலமாகவும் https://pukaarpetti.dailythanthi.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.


Related Tags :
Next Story